தண

எதுகை மோனை

23

தண்ணீர் பட்ட பாடாக வழங்கும் எதுகை மோனைகள் பழமொழிகளில் சிறப்பாக அமைந்திருப்பது வியப்பன்று. ‘அக்கரைக்கு இக்கரை பச்சை’, அகதியைப் பகுதி கேட்கிறதா?’, ‘அகம் ஏறச் சுகம் ஏறும்’, ‘ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு’, ‘குட்டையில் ஊறிய மட்டை’ என்பனபோல ஆயிரக்கணக்கான பழமொழிகளில் எதுகை அமைந்திருக்கிறது. அப்படியே, ‘சிங்கத்தின் காட்டைச் சிறுநரி வளைத்தாற்போல’ ‘சூலிக்குச் சுக்குமேல் ஆசை’, ‘தலை ஆட்டித் தம்பிரான்’, ‘தீயில் இட்ட நெய் திரும்புமா?’, ‘பெண்சாதி கால்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு’, ‘மனப்பால் குடித்து மாண்டவர் அநேகர்’ என்பன போன்றவற்றில் மோனை நயத்தைக் காணலாம்.

    நாடோடிப் பாடல்களில் குழந்தைகள் விளையாடும்போது பாடும் பாடல்களிலே பொருள் ஒன்றும் இல்லாவிட்டாலும் எதுமை நயமும் மோனை யமைதியும் உள்ள பல பாடல்கள் உண்டு. அந்த இரண்டும் குழந்தைகளுக்கு இன்பத்தை உண்டாக்குகின்றன.

கண்ணாம் கண்ணாம் பூச்சாரே
    காது காது பூச்சாரே1

என்பது கண்ணாமூச்சி விளையாட்டுப் பாடல். கண்ணை மூசுதல் என்றால் கண்ணை மூடுதல் என்று பொருள். கண் மூசி என்பது கண்ணா மூச்சி ஆகிப் பிறகு கண்ணாம்பூச்சி என்றும் வழங்குகிறது. இந்தப் பாட்டில் பொருள் சிறிதளவே இருக்கிறது. ஆனால் எதுகை மோனை அமைதியே சிறப்பாக இருக்கிறது.

தத்தக்கா புத்தக்கா
    தவலைச் சோறு
    நெற்றிமா நெருங்கமா
    பச்சை மரத்திலே பதவலை கட்டப்
    பன்றி வந்து சீராடப்
    பறையன் வந்து நெல்லுக் குத்தக்
    குண்டுமணி சோறாக்கக்
    குருவி வந்து கூப்பிடுது!1

    இந்தப் பாட்டில் சொற்களுக்குப் பொருள் இருந்தாலும் அந்தப் பொருள் தொடர்ச்சியாக இல்லை; ஆனாலும் எதுகையினாலும் மோனையினாலும் ஓசையழகு அமைந்திருக்கிறது.
______________________________________________________

    1. மலையருவி, ப. 260.