New Page 1
‘நீண்ட சாலையில்
இரவில் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் போகின்றன. பாரம் ஏற்றிக்கொண்டு செல்லும் அந்த
வண்டிகள் மெல்ல மெல்ல நகர்கின்றன. மாடுகள் மெதுவாகச் செல்கின்றன. இயற்கையே தூக்கத்தில்
ஆழ்ந்திருக்கும்போது அந்த வண்டித் தொடர் ‘கடக் கடக்’ என்ற சத்தத்தோடு மோனத்தைக் குலைத்துச்
செல்கின்றது. வண்டிக்காரர்களுள் ஒருவன் நன்றாகப் பாடத் தெரிந்தவன். ராகதாள அறிவுடையவனென்று
எண்ணிக் கொள்ளாதீர்கள். நாடோடி உலகத்துப் பாடல்களிலே அவன் வல்லவன். அந்த நள்ளிருளில்
இருட்டின் கனத்தைக் கிழித்துக் கொண்டு புறப்படும் கணீரென்ற சாரீரம் அவனுக்கு இருக்கிறது. அவன்
பாட ஆரம்பித்தால் எல்லா வண்டிகளும் அந்த இசையிலே ஒன்றிப்போய்விடும். வண்டிக்காரர்
யாவரும் பேச்சை நிறுத்திப் பாட்டிலே லயித்து விடுவார்கள். சிலர் தம் கையில் உள்ள கயிற்றை
வண்டியிலே கட்டிவிட்டுத் தூங்கிக்கூடப் போய்விடுவார்கள். மாட்டை விரட்டி ஓட்டவேண்டுமா? வழி
மாற வேண்டுமா? ஒன்றுமே இல்லை. முதல் வண்டி போகும் போக்கைப் பின்பற்றி ரெயில் வண்டித் தொடரைப்போல
அந்த வண்டிகள் அவ்வளவும் போய்க் கொண்டிருக்கின்றன.
‘வண்டிக்காரன் பாடும் பாட்டை
அவன் தோழர்கள் மாத்திரமா கேட்கிறார்கள்? அந்த மாடுகளும் காதை நெறித்துக் கொண்டு கேட்கின்றன.
மாடுகளுக்குச் சங்கீத உணர்ச்சி உண்டென்று புத்தகங்களில் எழுதியிருக்கிறார்கள். அந்தச் சாலையில்
நடுநிசியில் அந்த உண்மைக்குச் சாட்சி சொல்லுகின்றன, வண்டியை இழுக்கும் காளை மாடுகள். விடிய
விடியப் பாடிக் கொண்டே இருந்தாலும் வண்டி இழுக்கிறோம் என்ற உணர்ச்சியே இல்லாமல் அவை நடந்துகொண்டே
இருக்கும். வண்டிக்காரனுடைய பாட்டு அலையலையாக எழும்பிக் காளை மாடுகளை இழுத்துச் செல்கிறது.
‘தெம்மாங்கு பாடுகிறான் அவன். தேன் பாங்கு என்பது அப்படித் தேய்ந்து மாறி வழங்குகிறதென்று சொல்வார்கள். தேன் எப்படி
இனிக்கிறதோ அப்படி இனிக்கும் பான்மை அந்தப் பாட்டுக்கு உண்டாம். கட்டிளங் காளையாகிய வண்டிக்காரன்
வண்டியிழுக்கும் காளைகளையும் மயக்கும்படியாகப் பாடும் பாட்டல்லவா அது?’1
இந்தப் புத்தகத்தில் தெம்மாங்கைப்
பற்றிக் குறிப்பிடும் பாடல்கள் பல வருகின்றன.
__________________________________________________
1. கஞ்சியிலும்
இன்பம், ப. 53, 54.
|