II

32

ஆராய்ச்சி உரை

II

1. தெம்மாங்கு

    இந்தப் புத்தகத்தில் முதலில் தெம்மாங்கு என்ற பகுதி இருக்கிறது. தெம்மாங்குக்கு ஒரே ஒரு மெட்டுத்தான் உண்டு; ஆனாலும் அதைப் பலவாறு தாளத்தை மாற்றிப் பாடுவதுண்டு. இப்பகுதியில் ஆணின் கூற்றாகவும் பெண்ணின் கூற்றாகவும் 206 கண்ணிகள் இருக்கின்றன. இந்தக் கண்ணிகளில் பொருள் தொடர்பு ஏதும் இல்லை. பல பல நிலையிலே உள்ள ஆண்களும் பெண்களும் பாடும் முறையிலே துண்டு துண்டாக அமைந்தவை இவை.

    தன்னுடைய மாமனிடத்தில் காதல் கொண்டிருந்தாள் ஒரு பெண். அவனை மணக்க வேண்டுமென்ற ஆசையில் தன்னை அழகுபடுத்திக் கொண்டாள். தன் கூந்தலை மிகவும் பாதுகாப்பாக வளர்த்துக் கொண்டை போட்டு அழகு பார்த்தாள். அவள் காதல் வளர்ந்தது; கூந்தல் வளர்ந்தது; அழகும் வளர்ந்தது. ஆனால் விதி அவளுக்கும் அவள் மாமனுக்கும் குறுக்கே நின்றது. யாரோ ஒரு சோம்பேறிப் பயலுக்கு அவள் தன் கழுத்தை நீட்டும்படி ஆகிவிட்டது. அவள் உள்ளம் மறுகினாள். சோறாக்கும் இயந்திரமாக அவனிடம் தன் வாழ்நாள் முழுவதும் இருக்கும்படி முடிந்ததை எண்ணி எண்ணி ஏங்குகிறாள்.

    ஒருநாள் அவள் மாமன் வருகிறான். அவன் உலகியலின்படி, “சௌக்கியமாக இருக்கிறாயா?” என்று கேட்கிறான். அப்போது அருகில் ஒருவரும் இல்லை.

    சௌக்கியமா! அவளுக்குத் துயரம் பொங்கி வருகிறது. வெடித்துக்கொண்டு வருகிறது உணர்ச்சி.

ஆசைக்கு மயிர்வளர்த்து - மாமா
            அழகுக்கொரு கொண்டை போட்டுச்
        சோம்பேறிப் பயலுக்குநான் - மாமா
            சோறாக்க ஆளானேனே.1

______________________________________________

    1. பக்கம், 3 : 6.