இலக

தெம்மாங்கு

33

    இலக்கியத்தில் இப்படி வருவது அரிது. ஆனால் உலகில் இவ்வாறு வெந்து மனம் புண்ணாகும் மெல்லியலார் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வை உள்ளபடியே எடுத்துக்காட்டுகிறது இந்தத் தெம்மாங்கு.

    மற்றொரு பெண், களவுக் காதலில் ஈடுபட்டிருக்கிறாள். இராக்காலத்தில் அவளைத் தேடிக்கொண்டு அவள் காதலன் வருவது வழக்கம். அன்று அவனை எதிர்பார்த்திருக்கிறாள். அவனை யாரும் அறியாமல் சந்திக்கவேண்டும். அதற்கு இடையூறாக நிலாப்பால்போலக் காய்கிறது. அதுகண்டு அப்பெண் வருந்துகிறாள்.

    இத்தகைய காட்சியை இலக்கியங்களிலும் காணலாம். நிலவு வெளிப்பட வருந்தல் என்பது அந்தத் துறைக்குப் பெயர்.

    “கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடுவெண் ணிலவே”1

என்ற பாட்டைப் பாடியதனால் ஒரு புலவர் நெடுவெண்ணிலவினார் என்ற பெயரையே பெற்றிருக்கிறார்.

    சின்னஞ் சிறிய ஊரில் நிலவைக் கண்டு வருந்திய இளம் பெண், அந்த நிலவை வேண்டிக்கொள்வதாக ஒரு தெம்மாங்கு வருகிறது. அவள் மிகவும் பணிவோடும், “சாமி!” என்று மரியாதையோடும் நிலாவை அழைக்கிறாள். திங்களும் ஒரு தெய்வந்தானே? ‘நீ கொஞ்சம் மறைந்துகொண்டால் ஆகாதோ?’ என்று அவள் கேட்கிறாள்.

    வெள்ளைவெள்ளை நிலாவே - சாமி
வெளிச்சமான பால்நிலாவே
கள்ள நிலாவேநீ
கருக்கலிட்டால் ஆகாதோ?2

    இந்தத் தெம்மாங்கை இயற்றியவன், ரெயிலும் தந்தியும் வந்த காலத்தில் வாழ்கிறவன். ஆதலின் அவற்றைப் பற்றிய செய்திகளை வியப்போடு சொல்கிறான்:

வண்டியும் வருகுதடி - குட்டி
வடமதுரை டேசனிலே
தந்திபோய்ப் பேசுதடி - குட்டி
தம்புசெட்டி மெத்தையிலே.3

_______________________________________________

1. குறுந். 47.
   
2. மலை. ப. 4 : 7. 3. ப. 4 : 13.