New Page 1

36

ஆராய்ச்சி உரை

வெற்றிலையைக் கையில்வச்சு
        வெறும்பாக்கை நாக்கில்வச்சுச்
    சுண்ணாம்பு ஜாடைசொல்லி
        சுத்துறான்உன் அத்தைமகன்.1

    வறுமை ஒருபால்; செல்வம் ஒருபால். கூழ் ஒருபால்; சோறு ஒருபால். தாம் காய்ச்சிய கூழைச் சிறிதளவு குடித்துவிட்டு எஞ்சியதை அடுத்த வேளைக்கு மூடி வைக்கும் ஏழை ஒருபுறம்; அண்டா அண்டாவாகச் சோறாக்கி வீட்டுக்கு வந்த விருந்தினர்களுக்கு அள்ளி அள்ளி வைத்து அறம் வளர்க்கும் செல்வன் ஒருபுறம். இந்த இரண்டு காட்சிகளையும் ஒரு தெம்மாங்கில் பார்க்கிறோம்.

முட்டியிலே கூழுக்காய்ச்சி
        மூடிவைக்கும் பண்ணைப்புரம்
    அண்டாவிலே சோறாக்கி
        அள்ளிவைக்கும் கூடலூரு.2

    கூலிக்கு வேலை செய்யும் பெண் தன் வயிறு கழுவப் படும் பாட்டுக்கு எல்லையில்லை. மனித உணர்ச்சியற்றவர்கள் வேலை வாங்குகிறார்கள். அவள் வயிறு பசிக்கிறதோ இல்லையோ, தன் குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறாள். “ஐயோ! அதற்குப் பாலூட்ட வேண்டுமே!” என்று அவள் தாய்மனம் குமுறுகிறது. வேலை வாங்கும் எசமானைப் புகழ்ந்து கெஞ்சுகிறாள்.

தண்ணி கருத்திருச்சு
        தவளைச்சத்தம் கேட்டிருச்சு
    புள்ளை அழுதிருச்சு
        புண்ணியரே வேலைவிடு.3

    அந்தப் புண்ணியவாளன் என்ன செய்தானோ, நமக்குத் தெரியாது!

    இந்தப் பாடல்களில் நகைச்சுவைக்கும் பஞ்சம் இல்லை. குமரிகளைக் கண்டவுடன் ஒரு கிழவனுக்கு விறு விறுப்பு உண்டாகிறதாம்! அதை ஒரு பெண் நகைச் சுவைபடச் சொல்கிறாள்;

சுக்காங்கல்லுச் சரளைபோலே
        சுரிச்ச கிழவன்வந்து
    குமரிகளைக் கண்டுக்கிட்டுக்
        கோதுறானாம் மீசைகளை.4

___________________________________________

    1. ப. 23 : 141.                            
    2. ப. 25 : 156.
    3. ப. 25 : 160.
    4. ப. 25 : 157.