தொழிலாளர் பாட்டு

41

காடுகரை இங்கே இருக்கத்-தங்கமாமாவே
        காணாதசீமை ஏன்போகப்-பொன்னுமாமாவே?1

என்று அவள் கேட்கிறாள்.

    அவன் அவளை அழைத்துப் போவதன் நோக்கம் இன்னதென்று அவனுடைய பேச்சிலே தெரிந்துவிடுகிறது.

பிள்ளைபெறும் காலத்திலே தங்கம் தையலாளே
        பிள்ளைரூவா அஞ்சுவேறே-பொன்னு குயிலாளே2

என்று அவன் ஆசை காட்டுகிறான். அவள் பளீரென்று விடை கூறுகிறாள்; கன்னத்தில் அடித்தாற்போல் கேட்டு விடுகிறாள்.

    கலியாணம் பண்ணுமுந்தித்-தங்கமாமாவே
        கன்னிகுளி குளிப்பாளா-பொன்னு மாமாவே!3

    சந்தை வியாபாரம் என்னும் தலைப்பில் வரும் பாடல்களில் ஒரு காதலி ஒவ்வோர் ஊர்ச் சந்தையில் ஒவ்வொரு பொருளாக வாங்க வேண்டுமென்று சொல்லி அடுக்குகிறாள். அவ்வளவையும் வாங்கித் தாலி கட்டவேணும் என்று முடிக்கிறாள். காதலன் அவ்வளவையும் வாங்கித் தந்து, ‘ஊர் நாடெல்லாம் அறிய ஒழுங்காத் தாலியும் கட்டலாம்’ என்று சொல்லுகிறான்.

    இங்கே பல ஊர்களின் பெயர்கள் வருகின்றன. பெண்ணின் கூற்றில் ஒவ்வொரு கண்ணிக்குப் பின்னும்,

என்ன செய்யலாம் மாமா-நாம்
        ஏது செய்யலாம் மாமா?

என்பதும் ஆணின் கூற்றில் ஒவ்வொரு கண்ணிக்குப் பின்னும்,

இன்னும் என்ன வேணும் பெண்ணே-உனக்
        கேது வேணும் பெண்ணே?

என்பதும் ஈரடிமேல் வைப்பாக இருக்கின்றன.

5. தொழிலாளர் பாட்டு

    கூலி வேலை செய்யும் பெண்களும் ஆண்களும் பாடும் பலவகைப் பாடல்களை இப்பகுதியில் காணலாம். சுண்ணாம்பு குத்தும் ஏழைப் பெண்ணின் அவலத்தை முதலில் பார்க்கிறோம். அவர்களுக்கு மணிக்கட்டெல்லாம் நோகின்றன. அவர்களுடைய வயிற்றில் பசி மூளுகிறது.
_________________________________________

1. ப. 107 : 45.
2. ப. 106 : 38.
3. ப. 107 : 46.