10
10. புலம்பல்
பெண்கள் உணர்ச்சி
வசப்பட்டுப் பாடும் பாடல்களில் இரண்டு வகை மனித வாழ்வின் தொடக்கத்திலும் இறுதியிலும் கேட்பதற்குரியன.
பிறந்த குழந்தையைத் தாலாட்டும் தாலாட்டுப் பாடலும் இறந்தவர்களை எண்ணிப் புலம்பும் ஒப்பாரியும்
ஆகிய அவற்றைப் பாடும் ஆற்றல் இந்த நாட்டுப் பெண் குலத்திற்கே உரியது. இந்த இரண்டு வகையிலும்
உணர்ச்சி நிரம்பியிருக்கும். முன்னதில் வாத்ஸல்ய பாவமும், பின்னதில் அவலச் சுவையும்
பொங்கிவரும்; கவிப் பண்பும் சிறந்து நிற்கும்.
பெண்கள் புலம்பும் ஒப்பாரியைப்
பிலாக்கணம் என்றும் சொல்வார்கள். அது பிணக்கானம் என்பதன் திரிபு என்று அறிஞர் கூறுவர்.
இலக்கியங்களில் இத்தகைய பாடல்களைக் கையறு நிலை என்று சொல்வார்கள்.
இப்புத்தகத்தில் புலம்பல்
என்ற பகுதியில் இந்த அவலச் சுவைப் பாடல்கள் தொகுக்கப்பெற்றிருக்கின்றன. அவற்றில்
குறிப்பும் உருவகமும் விரவி நிற்கின்றன.
கட்டைப் புளியமரம்
கல்கண்டு காய்ச்சமரம்
கல்கண்டு தின்றோமம்மா
களைசோர்ந்து நிற்கிறோமே!1
என்பது ஓர் எடுத்துக்காட்டு. புளியமரம்,
கல்கண்டு என்பவை குறிப்பாகக் கணவன் உடம்பையும், இன்பத்தையும் புலப்படுத்துகின்றன.
கணவனை இழந்தவளைக் கண்டவர்கள்.
“அவள் தலை எழுத்து!” என்று இரங்குகிறார்கள். ‘தலையெழுத்தா! அதை என் தாய் அல்லவா முதலில் தெரிந்துகொண்டிருக்கவேண்டும்?
என் தலையைப் பார்த்த அவள் அதனை அறியவில்லையே!’ என்று புலம்புகிறாள் அந்தப் பெண்.
தலையெல்லாம் நான்சீவித்
தாழம்பூ வச்சாலும்
தலையிலே போட்ட எழுத்துத்
தாய்கூட அறியலையே!
____________________________________________________
1. ப. 278 : 14.
|