பக்கம் எண் :

New Page 1

302

மலையருவி

சொன்னதெல் லாம்காதில் கேட்கலை யோநீ
        என்னையும் கண்ணாலே பார்க்கலையோ
    பெண்ணே கண்ணேமனம் புண்ணாகு துசொன்னேன்
        பேரையும் ஊரையும் சொல்லம்மணி.

61

வானம்பூ மிதண்ணீர் எல்லாவற் றுக்கும்நான்
        வஞ்சிமார்த் தாண்டன்போல் ராசாவடி
    தேனேநீ இருக்கும் மாமலைக் கும்இன்னம்
        தினைக்காட்டுக் குங்கூட ராசாவடி.

62

ஆசைக்கா ரனுக்கு ரோசமில் லையென்று
        பேசவந் தாயாடா வேடுவனே
    ஆசாரம் பாசாரம் ஒன்றுமே இல்லாத
        நீசாஓ டிப்போடா என்னைவிட்டு.
    

63

வம்புக்குச் சண்டை வளர்க்கமாட் டோம்ஆனால்
        வந்தசண் டையும் விடவே மாட்டோம்
    வம்புதும் புநீ செய்யப்பார்த் தாயானால்
        அம்புவந் துன்னைத் துளைக்குமடா.         
  

64

இப்படிப் பேசையில் எப்படி யோவேடர்
        எங்கிருந் தோஇங்கே வந்தார்களே
    தப்பும் வழிதம்பி ரான்உட னேசெய்து
        தள்ளாத கிழவனைப் போலானான்.

65

தொண்ணூறு வயசுக் கிழவனைப் போல்உடல்
        தொங்கியே கண்கள் பஞ்சடைந்து
    தடுமாறித் தடுமாறித் தடியைக்கையி லேபிடித்துத்
        தந்திர மாக்கந்தன் தாளம்போட்டான். 
          

66

கொட்டிய பஞ்சைப்போ லேநரைத் துப்பல்லும்
        கிட்டியே வாயெச்சி லும்ஒழுக
    தொட்டியில் இருக்கும் பிள்ளையைப் போலவன்
        தத்திக்குத் திவிழுந் தெழுந்திருந்தான்.

67

செம்புலித் தோலைத் தரையிலே விரித்துச்
        செம்பொன்று கையிலே யும்பிடித்துச்
    சிவனடை யாளமும் நெற்றியி லேவைத்துச்
        சிவயோகி யைப்போலே உட்கார்ந்தானே.   
     

68