பக்கம் எண் :

முத்துப்பட்டன்கதை
- ஆராய்ச்சி
11

     இக் கோவிலின் வணங்கப்படும் ஐயனார் மலையாளிகளும் தமிழர்களும்
வணங்கும் தெய்வம். கோயில் தோன்றி சுமார் 400 ஆண்டுகள் இருக்கலாம்
கதை நிகழ்ச்சிகள் 400 ஆண்டுகளுக்குப் பின்னரும், 300 ஆண்டுகளுக்கு
முன்னரும் உள்ள காலத்தைக் குறிக்கின்றன.

உண்மையா? கற்பனையா?

     காலத்தைக் குறித்த ஆராய்ச்சியில் 300 வருடங்களுக்கும் 400
ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் இக்கதையின் நிகழ்ச்சிகள்
நடந்திருக்கலாமென்று கூறினோம். இக்கதை கற்பனைக் கதையா?
உண்மையை அடிப்படையாகக் கொண்டதா என்ற கேள்விக்கு விடை
காண்போம்.

     புராணக் கதைகளில் தெய்வீக சக்திகளால் நிகழும் நிகழ்ச்சிகள் பல
வருகின்றன. மனித சக்திக்கு அப்பாற்பட்ட சில சக்திகளின் தலையீட்டால்
கதை நிகழ்ச்சிகள் இயக்கப்படும். இராமாயணத்தில் தேவர்கள் முறையீட்டால்
அரக்கர்களை அழிக்கத் திருமால் இராமனாக அவதரித்தார். இராமனுடைய
சக்தி தெய்வீக சக்தி. அதை எதிர்த்து நிற்க எந்தச் சக்தியாலும் இயலாது.
வில்லுப் பாட்டுக்களிலும், இத்தகைய சக்திகள் செயல் படுவதாகக் காட்டும்
கதைகள் உள்ளன. உதாரணமாக ‘பழைகை நல்லூர் இசைக்கி கதையில்
காதலியைக் கொலை செய்த கோயில் பூசாரி செட்டியாகவும், கொலை
செய்யப்பட்ட கோவில் முறைக்காரி (தாசி) சோழன் மகள் நீலியாகவும்
தோன்றி, மறுஜன்மத்தில் அவனை அவள் பழி வாங்குகிறாள் என்றும்
கூறப்படுகிறது. இதுவும் “விதி” என்னும் இயற்கை விதிகளுக்கு அதீதமான
சக்தியின் வலிமையால் வாழ்க்கை இயக்கப் படுகிற தென்ற நம்பிக்கையால்
எழுந்த கதையே. இக் கொள்கைகள் நிலப்பிரபுக்கள் தங்கள் உயர்வுக்கும்,
உழவர் தாழ்வுக்கும் விதியையும், தெய்வ சித்தத்தையும் காட்டி
ஏமாற்றுவதையே குறிப்பிடும்.

     இயற்கைக்கு அதீதமான, தெய்வீகச் செயல் எதுவும், பட்டன் கதையில்
இல்லை. 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சமூகச் சூழ்நிலையில் செயல் பட்ட
சக்திகளைக் காட்டுவதில் பட்டன் கதை நாமறிந்த சரித்திர
உண்மைகளினின்றும் மாறுபடவில்லை. ஆரிய நாடு இருந்தது. பகடைகள்
அக்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்திருக்க முடியும். சமூக வேறுபாடுகளைப்
பாதுகாக்க, உழைப்பவரைக் கீழ்ப்படியில் மிதித்துவைக்க, சதிகளையும்,
கொலைகளையும், நில உடைமையாளர்கள் நிகழ்த்தியதும் உண்மையே.
வேறொரு வில்லுப்பாட்டு, “சின்னத் தம்பி கதையும்” இதற்குச் சான்று.