பக்கம் எண் :

12முத்துப்பட்டன் கதை

சின்னத் தம்பி, தனது வேட்டைத் திறமையால் பயிரை அழிக்கும்
விலங்குகளைக் கொன்று புகழ் பெற்று, பல இளைஞர்களுக்குத் தலைவனாக
சமூக அந்தஸ்தில்உயர்ந்து விட்டான் ; சக்கிலியனுக்கு அந்த அந்தஸ்து
கூடாது. என்றெண்ணி நிலப்பிரபுக்கள் அவனைச் சதி செய்து கொன்று விட்ட
கதைதான் அது.

     இக் கதையில் வரும் பாத்திரங்கள் கற்பனா பாத்திரங்களாக இல்லை.
உண்மையில் வாழ்ந்தவர்களாக கதைப் பாத்திரங்களின் அமைப்பில்
தோன்றுகிறது. சமூக உண்மை கதை முழுவதும் ஊடுருவி நிற்கிறது.
முத்துப்பட்டன் பொய்ம்மையை எதிர்த்தவன். சாதியைத் துறந்தவன். அது
மட்டுமல்ல. தான் சேர்ந்துவிட்ட குலத்துக்காக உயிர் விட்டவன். தன்னால்
பெண் கொடுத்த குலத்துக்கு அழிவு வராமல் பாதுகாக்க தன்னுயிர்
கொடுத்தவன். அவனைக் காமப்பித்தன் என்று வருணிக்கச் சிலர்
முயலுகிறார்கள். அவன் அண்ணன்மாரிடம் வாதாடுவதையும், செருப்புத்
தைத்து விற்று, பகடைகளது சமூக வாழ்க்கையில் இரண்டறக் கலந்து
விட்டதையும் மறைக்க அவர்கள் முயலுகிறார்கள். ஆனால் வில்லுப் பாட்டுப்
பாடப்படும் உருவில் இவை யெதையும் மறைக்க முடியாது.

     மேலும் தற்காலத்தில் சொரி முத்தையன் கோவிலில் நடக்கும்
தீக்குளிப்பு வைபவமும் இக்கதையின் நிகழ்ச்சிகள் உண்மையென்பதை
அடையாள பூர்வமாக காட்டுகின்றன. இந்த வைபவத்தின் போது
பட்டவராயன் கோவில் முன்பு ஒரு வண்டி விறகை எரிப்பார்கள்.
கோமரத்தாடிகள் (தெய்வ ஆவேசம் கொண்டு ஆடுபவர்கள்) தணலில்
இறங்கிமறுபுறம் செல்வார்கள். அவர்கள் தீயில் இறங்கு முன்பு சிங்கம்பட்டி
ஜமீன்தாரிடம் பாசிக் கொத்து வாங்கி அணிந்து கொண்டு செல்வார்கள்.
இந்த வழக்கம் எதற்கு அடையாளமாகக் காணப்படுகிறது? பாசிக் கொத்து
சக்கிலியர்களின் தாலி. இதை அணிந்து செல்லும் அம்மன் கொண்டாடிகள்
பொம்மக்கா, திம்மக்கா ஆகிய இருவரையும் உருவகப்படுத்துகிறார்கள்.
தீயிலிறங்குவது, உடன் கட்டையேறியதைக் குறிப்பிடுகிறது. சிங்கம்பட்டி
ஜமீன்தார் பாசிக்கொத்து அளிப்பது, அவருடைய முன்னோர் ஒருவர் உடன்
கட்டையேற அனுமதியளித்ததைக் குறிக்கும்.

பட்டவராயன் கோயில்

     பொதிகை மலை மேல் தற்போது காரையாறு அணை கட்டியுள்ள
இடத்திலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் பட்டவராயன் இருக்கிறது. இது
சொரி முத்தையன் கோயிலுக்கு வடக்கே உள்ளது.