பக்கம் எண் :

முத்துப்பட்டன்கதை
- ஆராய்ச்சி
13

இக்கோயினுள் மூன்று சிலைகள் உள்ளன. ஒன்று பட்டவராயன் சிலை,
இடுப்பில் சல்லடம், ஒரு கையில் வல்லயம், மற்றொன்றில் சூர்க்கத்தி,
தலையில் முண்டாசு, முறுக்கி விட்ட மீசை, சாய்ந்து விழுவது போன்ற நிலை
மொத்தத்தில் கலைத் திறன் மிக்க சிற்பி தன் ஆர்வமுழுவதையும் கொட்டிச்
செதுக்கியுள்ளது போலத் தோற்றமளிக்கிறது. ஒரு பக்கத்தில் திம்மக்கா,
இடுப்பில் ஒரு கூடை. ஒரு கை கூடையை அணைத்திருக்கிறது. இச்சிலை
பட்டவராயன் சிலைக்கு மற்றொரு புறமுள்ள பெண்ணுருவச் சிலையைவிட
சற்றே உயரமானது : மறுபுறம் இருக்கும் சிலை பொம்மக்கா. அவள் கையில்
ஒரு கலசம். மற்றொரு கையில் ‘பொந்தந்தடி’ என்ற கதை போன்றதடி.
இரண்டு சிலைகளும் மிக அழகாகச் செதுக்கப் பட்டுள்ளன.

     வன்னியரை எதிர்த்துச் சண்டை செய்யும்போது பட்டன்
உபயோகித்ததாகச் சொல்லப்படும் ஈட்டியும், வல்லயமும் கோயிலினுள்
சார்த்தி வைக்கப்பட்டுள்ளன. அவை போன்ற பல ஈட்டிகளும்
வல்லயங்களும், நேர்த்திக் கடனாக மக்கள் அளித்திருக்கிறார்கள். அவை
கோயிலுக்கு வெளியே இருக்கின்றன. பட்டன் சிலைக்கு அருகே இரண்டு
நாய்களின் உருவங்கள் இருக்கின்றன. அவற்றைப் பூச்சி நாய், காட்சி நாய்,
என்று சொல்லுகிறார்கள்.

     இக்கோயிலின் முன்னுள்ள பாறையில் இக்கோயில் தோன்றிய காலம்
999 ஸ்ரீ என்று பொறிக்கப்பட்டுள்ளது. இது கொல்ல மாண்டு சுமார் 150
வருஷங்களுக்கு முன் இக் கோயில் தோன்றியது என விளங்குகிறது.
மற்றொரு கல்வெட்டு இக் கோயில் சிங்கம் பட்டியாரால் கட்டப் பட்டதென்று
கூறுகிறது. இக்கோயில் கட்டுமுன் இக்கோயிலில் உள்ள சிலைகள்,
இக்கோயில் இருக்கும் இடத்திற்குச் சுமார் நான்கு மைல் கீழேயுள்ள சுளிய
முத்து பட்டவராயன் கோயிலில் இருந்ததாகவும், அது மிகவும் பழைமையான
கோயில் எனவும், அதுவே ஆதிப்பட்டவராயன் கோயில் எனவும்
கூறுகிறார்கள். இவ்விரண்டு கோயில்களுக்கும் நேர்த்திக் கடனாகச்
செருப்புகளைச் சேர்ப்பிக்கிறார்கள். இது கவனத்துக்குரியது.

     மலையில் பல பகுதிகள் இக்கதையின் நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்
படுத்திப் பெயரிடப்பட்டுள்ளன. கோயிலுக்குக் கிழக்கேயுள்ள இடம்
‘பசுக்கிடைவிளை’ என்றழைக்கப்படுகிறது. இங்கே தான் வாலப்பகடையின்
பசுக்கிடை இருந்ததாம். இப்பொழுதும் இங்கே பசுக்கிடை இருக்கிறது. ‘கச்சை
கட்டி முடுக்கு’ என்றொரு மலைப்பாதை இருக்கிறது. இங்குதான்
வன்னியருக்கும் பட்டனுக்கும்