பக்கம் எண் :

முத்துப்பட்டன்கதை
- ஆராய்ச்சி
15

     இனி இக்கதை எவ்வாறெல்லாம் வழங்குகிறது அவற்றுள் சரித்திர
நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமானது எது என்று காண்போம்.

கதை வேறுபாடுகள்

     முதற் பகுதியில் கூறப்பட்டுள்ள “பெரிய முத்துப்பட்டன் கதை” என்ற
அச்சுக் கதைப்பிரதியில் போக்கு எவ்வாறிருக்கிறது என்பதைக்
குறிப்பிட்டேன். இவற்றைத் தவிர சில முக்கிய மாறுதல்களைக் கொண்ட
கதையுருவங்களும் வழங்கி வருகின்றன அம்மாறுதல்கள் எவை என்று
காண்போம்.

     முதன் முதலில் முத்துப் புலவர் என்னும் வில்லுப் பாட்டுப் புலவர்
பாடி வரும் வில்லுப் பாட்டைக் கவனிக்கலாம். அவருடைய பாட்டின்படி,
பொம்மக்காவும், திம்மக்காவும், பிறப்பில் சக்கிலியப் பெண்கள் அல்லர்,
அவர்களுடைய பிறப்பு விசித்திரமானது. ஒரு பிராமணர் வீட்டில் பசு
வொன்று இரவோடு இரவாய் எருக்குழிக்குள் விழுந்து இறந்தது. அவர்
காலையில் அதைக் கண்டார் பசு இறந்ததைக் கண்ட பாவத்தைத்
தொலைக்கக் காசிக்குப் போய் விட்டார். அவர் மனைவி பாவந்தீர
உபவாசங்களிருந்து சிவபிரான் அருளால் இரட்டைக்குழந்தைகளைப்
பெற்றாள். இவற்றைத் தான் வளர்த்தால் ஊரார் பழி தூற்றுவார்களென்று
காட்டில் விட்டுவிடச் செய்தாள். காட்டில் ஒரு நாகம் குழந்தைகளைக்
காப்பாற்றிற்று. வாலப்பகடையும் அவன் மனைவியும் அவ்வழி
போகும்பொழுது குழந்தைகளைக் கண்டெடுத்து வளர்த்தனர்.

     இவ்வாறு பல இடங்களில் வில்லுப் பாட்டு பாடப்படுகிறது. முத்துப்
புலவரையே சந்தித்து இதைப் பற்றிக் கேட்டேன். அவர் வெளிப்படையாக
உண்மையைச் சொல்லி விட்டார். அவருக்கு முன் அவருடைய தகப்பனாரும்,
அவருக்கு முன் அவருடைய பாட்டனாரும், வில்லுப்பாட்டுப் பாடி
வந்தார்களாம். அவர்கள் தான் பட்டவராயன் கோவிலுக்கு வழக்கமாக
வில்லடிக்குப் போவார்களாம். மூவரும் பொம்மக்காவும், திம்மக்காவும்
பகடையின் மக்களென்றே பாடி வந்திருக்கிறார்கள். ஆனால் 25
வருஷங்களுக்கு முன்னால் சிலபிராமணர்களும், உயர் சாதிக்காரர்களும்
கதையை ஆட்சேபித்தார்களாம். பிராமணன் சக்கிலியப் பெண்களைக்
கலியாணம் செய்து கொள்ளும் கதை என்ன கதை என்று கேலி
செய்தார்களாம். சொரிமுத்து ஐயர் கோவிலுக்கு மேல் சாதிக்காரர்கள்
அதிகமாக வருவதால், இக்கதையை மாற்ற வேண்டுமென்றெண்ணி
முத்துப்புலவர் அவ்வாறே மாற்றி விட்டாராம்.