பக்கம் எண் :

18முத்துப்பட்டன் கதை

இருக்க வேண்டும். ஏனெனில் அச்சில் உள்ள வில்லுப்பாட்டில் சண்டைக்குப்
போகும் பட்டனோடு வாலப் பகடை செல்லவில்லை. மறு நாள் கூட தன்
மக்களோடு இறந்த மருமகனைக் காணச்செல்ல வில்லை. கலியாணத்திற்குப்
பின் அவனைப்பற்றிய பேச்சே இல்லை. நாடோடிப் பாடல்களில் இவ்வாறு
முக்கிய கதா பாத்திரங்களை நட்ட நடுவில் மறந்து விடுவது மரபல்ல.
சின்னத்தம்பி கதையில் மகன் இறந்ததை அறிந்த, தாய், மணம் பேசி
வைத்திருந்த சோனைச்சி, தகப்பன் ராமப்பகடை, அனைவருமே
உயிர்விடுகிறார்கள் அவனுடைய நாய் கூட உயிர் விடுகிறது. ஆகையால்
வாலப்பகடை உயிரோடிருந்தால் அவனது முடிவுபற்றிக் கட்டாயம்
வில்லுப்பாட்டு சொல்லியிருக்கும். பகடை இறந்து விட்டானென்றும்,
இறந்தபின் முத்துப்பட்டன் இனத்தாருக்கும் உழவர்களுக்கும்,
வணிகர்களுக்கும் செய்த நன்மைகளைப் பற்றி முத்துப்புலவர் வில்லுப்பாட்டில்
பாடுகிறார். சுப்பிரமணியக் கவிராயரும், வாலப் பகடை இறந்த பின்தான்
கொள்ளை நடந்தது என்று சொல்லுகிறார்கள்.

     5. கொள்ளை நடத்தியவர்கள் வன்னியக் கரந்தை தேவர்கள் என்று
முத்துப் புலவரும், சுப்பிரமணியக் கவிராயரும் ஒருமுகமாகச்
சொல்லுகிறார்கள். காரணம் கேட்டபோது அவர்கள் கூறியது இதுதான் :
அவர்கள் தேசத்தில் 11 வருஷப் பஞ்சம் ஏற்பட்டது. அவர்கள் உக்கிரங்
கோட்டைப் பாளையக்காரர் தங்கள் சாதியைச் சேர்ந்தவன் என்று புகலிடம்
கேட்டார்கள். அவன் அவர்களைப் பொதிகை மலைக் கிடைகளைக்
கொள்ளையடிக்க ஏவித் தானும் ஆட்களை அனுப்பினான். அவருக்கும் பங்கு
கொடுப்பதென்று உடன் படிக்கை ஆயிற்று.

     மேற்கூறிய விவரம் இருவரும் கூறியது. தேவர்கள் முதற்கால
மன்னர்களிடம் படை வீரர்களாக இருந்து நிலத் தொடர்பை இழந்து
விட்டார்கள். பாண்டியராட்சி மறைந்து நாயக்கர் ஆட்சி ஏற்பட்டபின்னர்,
அவர்களில் பெரும் பாலோர் பிழைக்க வழியின்றி கூட்டம் கூட்டமாகக்
கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள். திருமலை நாயக்கர் காலத்தில் அழகர்
மலைத் திருடர்களை அடக்க “மதுரைவீரன்” உதவினான் என்று மதுரை
வீரன் கதை கூறும். “வன்னியன் கதை” “பட்டன் கதை” இவற்றிலும்
இவர்கள் கொள்ளையடித்தது கூறப்படுகிறது. இத்தகைய ஒரு கூட்டத்தை
உண்டாக்கியது பலவீனமான நிலப் பிரபுத்துவமே. அவர்களுக்குத் தொழில்
கொடுத்து, நிலம் கொடுத்துப் பிழைக்க வழி செய்ய நிலப்பிரபுத்துவ
ஆட்சியால் முடியவில்லை. ஒரு சில நிலப்பிரபுக்கள் கொள்ளைக்
கூட்டங்களை ஆதரித்து, பெரும் பணம் திரட்டினார்கள்.