பக்கம் எண் :

26முத்துப்பட்டன் கதை

மீது இரக்கம் ஏற்படுகிறது. ஆனால் அவர்களது களவுத் தொழிலும்,
அவர்களுள் ஒருவனது கோழைத்தனமும் நமக்கு கோபத்தை உண்டாக்குமாறு
சித்தரிக்கப்பட்டுள்ளது.
முடிவுரை

     நாட்டுக் கதைப் பாடல்களிலும் கர்ணபரம்பரைக் கதைகளிலும் சாதித்
தடைகளை மீறி காதல் துளிர்த்து வளர்வது போற்றப்படுகிறது.
அக்கதைகளுள் சிலவற்றைப் பற்றியாவது தெரிந்து கொண்டால் தான்
முத்துப் பட்டன் கதையின் சிறப்பு இயல்பை நாம் உணர முடியும். ஆகையால்
திருநெல்வேலியிலும் நாஞ்சில் நாட்டிலும், வழங்கும் கலப்பு மணம் பற்றிய
கதைகள் சிலவற்றை இங்கே குறிப்பிடுவோம்.

     மேல் மலையடி வாரத்தில் சிவசைலம் என்றோர் கிராமம்.
இக் கிராமத்தில் சேதுராயர் சாதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன்
இருந்தான். அவன் அடிக்கடி மலைக்கு வேட்டைக்குச் செல்வதுண்டு. அங்கு
மலைப்பளிங்கர் சாதியைச் சேர்ந்த பெண்ணைச் சந்தித்தான். அவள் காட்டு
சாதியைச் சேர்ந்தவள். முற்றிலும் நாகரிகம் அடையாத இனத்தவள். பளியர்கள்
வேட்டையாடியே பெரும்பாலும் தம்வாழ்க்கையைக் கழித்தார்கள். பெண்கள்
சிறிதளவு மலை வேளாண்மை செய்வார்கள் கொம்புச் சாமான்கள்
செய்வார்கள். வேலை செய்வதனால் அவர்கள் வீட்டில் அடைபட்டுக்
கிடக்கமாட்டார்கள். சேதுராய இளைஞனும் வேட்டையாடச் செல்லும்போது
பளிங்க சாதி இளைஞர்களைச் சந்தித்து அளவளாவுவான். அவர்களோடு
சேர்ந்து வேட்டையாடுவான். இரவில் ஊருக்கு வெளியே மணமாகாத பளியர்
இளைஞர்கள் தங்கும் இளவட்டஞ் சாவடியில் தீக்கணப்பருகே உறங்குவான்.
அவனும், அவளும் தனிமையில் சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அவர்கள்
உள்ளங்களில் காதல் அரும்பிற்று. பளியர் சாதியில் விவாக உறவுகள் மிகவும்
கண்டிப்பானவை. பெண் வேறு சாதியானோடு பேசியதைக் கண்டாலே
வீட்டில் சிறை வைப்பார்கள். “தவறு நடந்துவிட்டால்” கொன்றே
போடுவார்கள். அப்படியிருந்தும் அவள் துணிந்து விட்டாள். உயிரைவிடக்
காதலுக்கு மதிப்பு வைத்தாள். அவனுடைய சாதி ‘நாகரிகம்’ படைத்த
சிறுவிவசாயி குடும்பம். ஆடு மாடு நிலபுலன் உள்ள குடும்பம்.
சாதிக்குள்ளேயே பெரிய குடும்பம் என்று சொல்லலாம். அங்கு எவ்வளவு
தடைகள் இவ்வுறவுக்கு ஏற்படும் என்பது இளைஞனுக்குத் தெரியாது. அவன்
ஊர்திரும்பினான். பெற்றோரிடம் காதல் கொண்ட பெண்ணை மணம்
செய்துவைக்கக் கோரினான்.