பக்கம் எண் :

30முத்துப்பட்டன் கதை

இவர்களுடைய கொள்ளையில் ஜமீன்தார்களுக்கும் பங்கு உண்டு.
மறைமுகமாகக் கொள்ளையடித்தது போதாதென்று, வெளிப்படையாகக்
கொள்ளையடிக்கத் தூண்டிய ஜமீன்தார்களது முயற்சிக்கு முத்துப்பட்டன்
தடையாக நின்றான். சக்கிலியர்களைத் திரட்டி கொள்ளைக்காரர்களை
விரட்டியடித்தான். பொதிமாட்டுக்காரர்கள் தங்கள் வியாபாரப் பொருள்களை
பத்திரமாகக் கொண்டு செல்லப் பாதுகாப்பு அளித்தான். இவனது காவலில்,
கொள்ளைக் காரர்கள் காட்டினுள்ளும், பாதைகளிலும் வியாபாரிகளைக்
கொள்ளையடிக்க முடியவில்லை.

இக்கதைப் பாடல் :

     இதன் ஓலைச்சுவடிகள் இரண்டு குமரி மாவட்டம் தாமர குளத்திலிருந்து
எனது நண்பர் வேலாயுதத்தின் உதவியால் கிடைத்தன, அவற்றை இரு
அச்சுப்பிரதிகளோடு ஒப்பிட்டு, பெரும்பாலும் ஓலைச்சுவடியைப் பின்பற்றி
இக்கதைப்பாடல் பிரதி செய்யப் பட்டது, ஒத்துப்பார்க்கவும், பிரதி செய்யவும்
உதவிய புலவர் ஆ. சிவசுப்ரமணியனுக்கு எனது நன்றி.

     இக்கதையையும் ஆய்வு முன்னுரையையும் சேர்த்து வெளியிட மதுரைப்
பல்கலைக் கழகம் வாய்ப்பளித்துள்ளது. நாட்டுப் பாடல் வெளியீட்டிலும்,
ஆராய்ச்சியிலும் பேரார்வம் கொண்ட மதுரைப் பல்கலைக் கழகத் துணை
வேந்தர் டாக்டர் திரு. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்களுக்கு நான்
மிகுதியும் கடமைப் பட்டுள்ளேன். தமிழகம் இவ் வெளியீடுகளைக் கொணர
காரணமாயிருந்த தெ. பொ. மீ. அவர்களுக்கும், மதுரைப் பல்கலைக்
கழகத்திற்கும் தமிழக நாட்டுப்பாடல்களில் ஆர்வமுள்ளவர்களும்,
ஆய்வாளர்களும் தமிழக மக்களும் கடமைப்பட்டுள்ளார்கள்.

பாளையங்கோட்டை                                                                             நா. வானமாமலை
   21-9-70                                                                                                                         பதிப்பாசிரியர்