பக்கம் எண் :

32முத்துப்பட்டன் கதை

  சேரனிடம் போனோமானால் சேவிக்கலாம் மிச்சமில்லை
சோழனிடம் போனோமானால் சோறுண்டு சுனையுமில்லை7
பாண்டியனிடம் போனோமானால் பழுதுவரு மென்றுசொல்லி
கொட்டாரக் கரைதனிலே ராமராஜ னரண்மனையில்
போகவேணு மென்றுசொல்லி புகழுடைய முத்துப்பட்டன்
கொட்டாரக் கரையதிலே ராமராஜன் ஊரதிலே
சட்டனவே தானடந்து சஞ்சலமாய் வீற்றிருந்தான்
  முத்துப்பட்டனின் ஆற்றலைக் கொட்டாரக்கரை மன்னன் காணல்
  ராஜனுமே வீற்றிருக்க நாட்டியங்கள் ஆடிவர
அப்போது முத்துப்பட்டன் அவனுடைய தொழில்காண
சமுத்திரத்தில் வாள்நிறுத்தி சக்கரம்போல் சுழன்றுவந்தான்
கண்டானே அரசமன்னன் கட்டழகன் பட்டனைத்தான்
ராஜாவோ மந்திரியோ நமக்குஇவன் மாற்றானோ
வாடாநீ அறிக்கைக்காரா வார்த்தையொன்று சொல்லக்கேளாய்
அக்ஷணமே அறிக்கைகாரா அவனையிங்கே அழைத்துவாடா
 

மன்னன் முன் முத்துப்பட்டன்

  அப்போ தறியக்காரன் அவனையங்கே யழைத்துவந்தான்
வந்தவுடன் ராஜமன்னன் வாய்திறந்தேது சொல்வான்
எந்தவூர் எந்ததேசம் எங்கிருந்து வந்தபிள்ளை
என்று சொன்ன வேளையிலே ஏத்தரிய8 முத்துப்பட்டன்
சொல்லுவானா மரசனிடஞ் சோதிமுத்து வாய்திறந்து
ஆரிய நாடதிலே ஆறண்ணன் மாரோடோ
சண்டையிட்டு யான்பாவி தனிவழியே வந்துவிட்டேன்
என்னையொரு சேவகமா யிருத்திக்கொள்ள வேணுமையா
  மன்னனிடம் வேலைக்கு அமர்தல்

 

 

என்றுசொன்ன வேளையிலே ஏற்றதொரு அரசமன்னன்
பதினாறு வயதுப்பிள்ளை பல கணக்குப் படித்தாரென்று
கைக்காயிரம் மெய்க்காயிரம் கால்க்காயிரம் வாள்க்காயிரம்
நன்றாக சேவகன்தான் நமக்குஇவன் கிடைத்தானென்று
நாலாயிரம் பொன்சம்பளம் நலமாகத் திட்டம்செய்து
சேவகற்கு மனுவெழுதி9 திறமையுட னிருக்கையிலே
  முத்துப்பட்டனைத் தேடி தமையன்மார் வரல்
  ஆரிய நாடதிலே ஆறண்ணன் மார்கூடி
சண்டையிட்டுப் போனதென்று தம்பியைத்தான் தேடியல்லோ
வாராரே ஊர்க்கொருவர் வழிமேலே தேடிக்கொண்டு
அம்பலப் புழைதனிலே மகாதேவருட கோவிலிலே