பக்கம் எண் :

முத்துப்பட்டன்
வில்லுப்பாட்டு
33

  அத்தாள மவதரித்து அடுத்தநாள் தேடிவாரார்
கொட்டாரக் கரைதனிலே ராமராஜா ஊரதிலே
ஊரெல்லாம் தேடியவர் ஓய்ந்திருக்கும் வேளையிலே
வைதீகனொரு பார்ப்பான் வந்தவர்க ளண்டையிலே
“வாருங்கோ பட்டன்மாரே வாடியிருப்பானேன்”
“அய்யாவே பெரியவரே ஆசீர்வாதஞ் சொல்லக்கேளு
எங்களுக் கிளையதம்பி ஏற்றஆரிய முத்துப்பட்டன்
பட்டுநல்ல குடைபிடித்து பாப்பாசி காலில்மாட்டி”
உத்தரியந் தோளில்மாட்டி உல்லாசமாக வாரான்,
அரண்மனைக்குப் போவதற்கு ஆணழகன் வாரபோது
கண்டாரே யண்ணன்மார்கள் கட்டழகன் பட்டனைத்தான்.
“என்பிறவி என்பிறவி உன்னைக்கண்டெத்தனை நாளாச்சுதடா
தாயுந் தகப்பனாரும் தவித்தல்லோ தேடுகிறார்
சேஷய்யர் பெண்ணையல்லோ சிறப்பூட்டக் கேட்டிருக்கு
திரவியங்க ளுண்டுமானால் சீமைக்குப் போய்விடலாம்”
என்றுசொல்லி பட்டனவன் ஏற்றமனைதனிலே
  மன்னனிடம் முத்துப்பட்டன் விடைபெற்று பரிசுகள் பெறுதல்
  சொல்லுவான் ராஜனிடம் சோதிமுத்து10 வாய் திறந்து
அண்ணன்மார் வந்ததும் அவர்கள் சொன்ன சங்கதியும்
அப்போது அரசமன்னன் அவனுடய சம்பளத்தை
சாளியல் சாளியலாய்11 “சம்பளமுந் தான்கொடுத்து
காதுக்கு முத்துக்கடுக்கனும் கண்டசரமாலையுங் கொடுத்தான்
கைவிரல்பத்துக்கும் கல்வைத்தமோதிரம் கஞ்சப்பூபஞ்சரத்னம்
யாளிமு டுகுட னேவீரச சங்கிலி நல்முத்துப் பாசியீந்து
ராசிமா லைதங்கக் காசிமா லையுடன் நல்லசுட்டிப்பதக்கம்
வீராவா ளிப்பட்டு தங்கச்சரப்பளி மேலுக்கு உத்தரியம்
மெய்ப்புடன் காலுக்கு தங்கக் கொலுசதும் முத்துக்குடை கொடுத்தார்
குடையும் விடைகொடுத்து கொட்டாரம் விட்டிறங்கி
அண்ணன்மார் வந்திருக்கும் அந்தவிடம் வந்துசேர்ந்தான்
 

காட்டு வழியில் உள்ள பயம்

  தம்பியே முத்துப்பட்டா சரியல்ல காட்டுப்பாதை
வம்பதாய் கள்ளர்வந்து வதைத்துமே விடுவார்நம்மை
செம்படை மிருகந்தன்னை சேரவே ஒன்றாய்க்கூடி
கம்ப ம்போ லொன்றுசேர்ந்து கனமூட்டைப் போமென்றார்
என்றவர் சொல்லக்கேட்டு ஏற்றதோர் இளையபட்டன்
செங்கதி ரோனுக்கேற்ற சிவந்திநூல் பட்டுவாங்கி