பக்கம் எண் :

38முத்துப்பட்டன் கதை

  தெய்வலோகந் தன்னையாளும் இந்திரனோ தேவனோ?
தேவாதி தேவனோ அறியேன்.
மன்மதனோ மாயனோ ஏகச் சக்ராதிபனோ?
வையகத்தில் கண்டறியேனான்.
வையகத்தில் வாழும் அகத்தியனோ வானவனோ இந்திரனோ ;
மகாபெரியாரோ அறியேனான்.
பெற்றெடுத்த மாதாபிதா கண்டாலுயிர் வைப்பாரோ?
பெறாத மலடியுஞ் சகிப்பாளோ?
தந்திர வெயிலிலே நித்திரை போகவும்,
சங்கடமென்ன வந்தது அய்யனே?
ராஜனே தெய்வகுல நாயகனே எழுந்திரியும்,
நாகமரத்தின் நிழலில் போய்ப்படும்.
  மயக்கம் தெளிந்தெழுந்த பட்டனிடம் பகடை பேசல்
  கையை கொண்டு தட்டிச் சின்னக் கல்லைக்கொண்டெறிந் தெழுப்ப
கண்விழித்துப் பார்த்தான் முத்துப்பட்டனும்,
விழித்தவுடன் முத்துப்பட்டனும் நீயாரென்று கேட்க
மொழிந்திடுவான் வாலபகடைதான்.
அய்யாவே தம்பிரானே எந்தன் மக்கள் ரெண்டுபேர்கள்
அரசடித் துறையில் வரும் வேளையிலே
மோகித்து ஒருபார்ப்பான் மோசம் செய்ய வந்தானாம்
மூர்க்கனை ரெண்டு துண்டாக வெட்டுவேன்
கண்டதுண்டமாய் வெட்டிக் கத்திக்கிரையாய்க் கொடுப்பேன்
காட்டுநரிக் கிரையாக வெட்டுவேன்
 

பட்டனின் மறுமொழியும் வேண்டுகோளும்

  அந்தமொழி சொன்னவுடன் சக்கிலியன் என்றறிந்து
அப்போது முத்துப்பட்டன் முறைசெப்புவான் ;
“தாயுடன் கூடப்பிறந்த ஆசையம்மானே !
சமர்த்திகளுக் காசைப்பட்டு ஓடிவந்தேனே.
பூசைவிட்டுப் பொருள்விட்டு என்மனந்தானே
பெண்ணாசைப்பட்ட பாவிநானே
தாய்வெறுத்தேன் தமையனிழந்தேன் உன்மக்களை !
நான் வெறுத்தா லெந்தன் உயிர் மாண்டிருந்தானே.
பேய் பிடித்தானைப் போலாகிவிட்டேன்
நான் பிழையேன், சக்கிலியா உன்மக்களை”
நாலுபேரறிய மாலைசூட்டிவைப்பாய் நாளை,
நாளையென்று உரைத்தவுடன் வாலப்பகடை,