கொடுக்கிறோம்” என்றார்கள். “அப்படியானால் நாங்கள் உங்களுக்கு வேண்டிய வெண்ணெய் கொடுக்கிறோம். நீங்கள் உங்கள் காணியில் கால் காணி நிலம் கொடுத்தால் போதும்” என்று மாட்டுக்காரர்கள் சொல்ல, அவர்களும் ‘சரி’ என்று ஒப்புக் கொண்டார்கள். அதன்படி அன்று இரவு நாடகத்துக்கு வேண்டிய வெண்ணெயைக் கொடுத்தார்கள். அப்போது வேட்டுவக் கவுண்டர்கள் வேண்டுமென்றே நெய்யை மொண்டு மொண்டு வீதியில் போகுமாறு பந்தத்தில் ஊற்றி சேதம் செய்தும் மாட்டுக்காரரிடம் நெய் குறையவில்லை. நாடகம் முடிந்ததும், எல்லோரும் ஒன்று கூடி யோசனை செய்தார்கள். “நாம் பரம்பரையாக இங்கே குடித்தனம் செய்திருக்க, நேற்று வந்த மாட்டுக்காரனுக்கு நாம் நிலம் கொடுத்தால், நாளை பெண் கேட்பான். இவர்களைச் சும்மா விட்டால் நமக்கு பெருத்த அவமானம் ஏற்படும். ஆகவே, நாமெல்லாரும் கூடி அவர்களை இன்று இரவு கொன்று ஆற்றில் எறிந்துவிட வேண்டும்” என்று திட்டம் போட்டார்கள். இது இப்படியிருக்க, ஆற்றுப்படுகையில் இருந்த மாட்டுக்காரருள் ஒருவருக்கு அண்ணன்மார் சுவாமி சன்னத்தம் ஆகி, “நீங்கள் இங்கு இருந்தால் ஆபத்து. இந்த நிமிடமே மாடுகளை அவிழ்த்து விட்டு ஓடுங்கள்” என்று சொன்னதின் பேரில் எல்லாரும் மாடுகளை அவிழ்த்து ஓட்டிக்கொண்டு புறப்பட்டுப் போய்விட்டார்கள். அதன் பிறகு ஆயுதங்களுடன் அங்கு வந்து பார்த்தவர்கள் மாட்டுக்காரர்கள் அங்கு இல்லாததைக் கண்டு வருந்தினர். பின், “மாட்டுக்காரன் நம்மை ஏமாற்றி விட்டுப் போய்விட்டான். பரவாயில்லை, புறப்படுங்கள். நாமும் பின் தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்துவிடலாம்” என்று கூறியவாறு புறப்பட்டார்கள். | | |
|
|