கோமுட்டியும் குடங்கொட்டியும் குடிப்பட்டார் அல்லாமல் வாளெடுத்த பேரை வையத்தில் எங்கும் காணோம் என்று மதுக்கரை குலக்காடு மாமதுரை எல்லைவிட்டு வளநாடு திசைநாடி வள்ளாளன் புரவி வருகுதே அப்போது பிரதானி வாளெடுத்த பேர்தேடி வருகிறது தான் தெரிந்து |
பிரதானி வருகிறதை தங்கை அண்ணரிடம் சொல்லுதல் |
இந்த நல்ல காரணத்தை இதமாகச் சொல்வோமென்று சொப்பனங்கண்டவர்போல் தங்கை துரிதாக ஓடிவந்து உப்பரிகைவிட்டு உயர்ந்த ஏகாந்த மேடைவிட்டு அன்னலூஞ்சல் மேடைவிட்டு தங்கை அதிரக் குதித்திறங்கி எறும்பேறா மேடைவிட்டு உத்தமியாள் வாரபோது பலகணி வாசலிலே அண்ணர் பார்த்தாரே கண்ணாலே தம்பியரைத் தான்பார்த்து தார்வேந்தர் ஏதுசொல்வார் வாராய் இளவரசே வாள்வீரா தம்பிசங்கு தங்கை அன்னலூஞ்சல் மேடைவிட்டு அண்ணர்பக்கம் வாரதென்ன என்ன அதிசயங்கள் ஏதேது கண்டாளோ வாரதொரு காரியந்தான் என்னவகையோ தெரியவில்லை சோளி சதுரங்கம் அதைத் தொட்டாட்டம் விட்டுவைத்து சதுரமணி பலகையைத்தான் அதைத்தள்ளி அப்புறந்தான் வாராய் இளவரசி வாள்வீரன் தங்கையரே வெள்ளேடு வாசிக்கும் வெள்ளாளன் பிறந்தவளே உத்தமா பத்தினியே ஒருசொல்லு வாசகியே அன்னலூஞ்சல் மேடைவிட்டு அண்ணர்பக்கம் வந்ததென்ன? என்ன அதிசயங்கள் எது கண்டுவந்தாய் அம்மா? அந்த மொழிகள் சொல்ல உத்தமி அண்ணருக்கு ஏதுசொல்வாள் |