பக்கம் எண் :

304அண்ணன்மார் சுவாமி கதை

சந்தோஷமாகியேதான் மாட்டிடையன் தானுமங்கே ஏதுசொல்வான்
எங்கள் வளநாடு எல்லையிலே குதிரையேறி வரப்போகாது
வாகை பிடித்திழுத்து வாசல் வாருமையாவென்று சொல்லி
மாட்டிடையர் சிறுவர்கள் பிரதானியை வரவழைத்துக்கூட்டியேதான்
ஊருக்கு மேற்கே ஆண்டவர், அரண்மனை உப்பரிகை மேடையிது

ஐந்துகட்டு மேடை அரண்மனை ஆசார மேடையென்று
கைகாட்டி கண்சிமிட்டி மாட்டிடையன் கடக்கநின்று சொல்லையிலே
வாகை பிடித்திழுத்து வாசல்பிரதானி வருகிறவேளையிலே
சிங்காதனத்தில் அண்ணர் திருக்கொலுவு வீற்றிருக்க
கண்டாரே கண்ணாலே சங்கர் கண்குளிரத் தான்பார்த்து

ஆரோ தெரியவில்லை நம்ம அரண்மனைக்கு வாராரிப்போ
வளநாட்டு எல்லையிலே குதிரை வந்தவன்போல் காணுகுது
வந்தவனைத் தானுமிப்போ வாளுக்கிரை செய்திடுவேன்
அந்த மொழி சொல்லி பொன்னர் அப்போது ஏதுசொல்வார்
மனைதேடி வந்தவரை தம்பியரே வாளுக்கிரை செய்யலாமோ

என்னயிருக்க நீயேது சொன்னாய் தம்பியரே?
தம்பியரைத் தானமர்த்தி தார்வேந்தர் சொல்லையிலே
அந்த மொழிகேட்டு பிரதானி அப்போ மனங்கலங்கி
வெட்டுவேனென்று சொன்ன விசனமும் கேட்டுமப்போ
சிந்தை கலங்கியேதான் திகைத்து நின்று அந்நேரம்

மனந்தெளிந்து துணிந்து பிரதானி வணக்கமுடன் பணிகள் செய்து
ஓலைச்சுருளெடுத்து சிவசோழர் உத்திரத்தை முன்னே வைத்தான்