பக்கம் எண் :

306அண்ணன்மார் சுவாமி கதை

என்றே சிவசோழர் எழுதிய உத்திரந்தான்
என்றுமே அண்ணர்சொல்ல ஏதுசொல்வார் தம்பிசங்கு
சீமை காவல் கொள்கிறோமென்று ஓலை சீக்கிரமாய் எழுதுமண்ணா
ஓலை எழுதாவிட்டால் அவனை யொருநொடியில் வெட்டிடுவேன்
என்று தம்பி சங்கர் சொல்ல ஏதுசொல்வார் அண்ணருந்தான்

வாராய் இளவரசே வாள்வீரா தம்பிசங்கு
நீ சொல்லுகிற வார்த்தை துஷ்டத்தனமான வார்த்தை
சோழர் துரைத்தனம் செய்கிறவர் நாம் குடித்தனம் செய்கிறவர்
இவரைப் பார்க்காது போனாலும் அவரை நாம் பார்க்கவேணும்
அதனால் வெட்டுகிறேனென்று சொன்ன வீரியத்தை விட்டுவிடு

அண்ணரும் சொல்லையிலே சங்கரும் அன்பாய் மனமகிழ்ந்து
வாசல் பிரதானியை வகையாய் விசாரித்து
அனுப்புயுமே வையுமென்று சங்கர் அன்புடனே சொல்லையிலே
தங்காள் பிறவியரைத் தான்கேட்போம் என்று எண்ணி
வாராய் இளவரசி வாள்வீரன் தங்கையரே
உத்தமா பத்தினியே ஒருசொல்லு வாசகியே
வேதப்பிராமணியே வெள்ளாளன் பிறந்தவளே
பத்தினியாள் கண்டகனா அம்மா பழுதொருநாள் போகாது
காரிழையாள் கண்டகனா எனக்கு கைமேல் பலித்ததிப்போ
உத்தமியாள் கண்டகனா எனக்கு உள்ளபடி ஆச்சுதிப்போ

சிவசோழர் வாசல் பிரதானி வந்துவிட்டார் நம்மைத்தேடி
வாசல் பிரதானியை வகையாய் விசாரித்தனுப்பவேணும்
போசனங்கள் விசாரியும் பொன் போன்ற பிறவியரே