ஆகவே தூரன் கூட்டத்தார்க்கும் அண்ணன்மார்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் கற்பிப்பது பொருத்தமுடையதேயாகும். இத்தோர நாட்டு தூரன் கூட்டத்தாரும் ஏறக்குறைய பொன்குன்ற நாட்டு வேளாளர்களுடனே கொங்கில் குடியேறினர் என்றுங்கூடச் சொல்லலாம். இவ்வாறு குடியேறிய சிறிது காலத்திற்குப் பின்பே குன்றுடையாக் கவுண்டர் பிறப்பும், பின்னர் பொன்னர் சங்கர் பிறப்பும் நிகழ்ந்திருக்கக் கூடும். எனவே முன்னர் குறிப்பிட்டபடி பொன்னர் - சங்கர் பிறந்து வாழ்ந்த காலம் கி.பி.15-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியே என்று துணிந்து கூறலாம். அல்லது சிவசோழர், கரிகாலச் சோழர் என்ற பெயரைக் கொண்டு மூன்றாம் குலோத்துங்கன் - இரண்டாம் ராசாதிராசன் காலத்திற்கு பொன்னர் சங்கர் காலத்தைக் கொண்டு சென்றால் வேளாளர் குடியேற்றம் இன்னும் முற்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்கக் கூடும். அவ்வாறாயினும் இதற்கு முன்னால் (கி.பி.12-ஆம் நூற்றாண்டு) பொன்னர் சங்கர் காலத்தைக் கொண்டு செல்லுதற்கில்லை. இத்தகு வரலாற்றுச் சிறப்பு மிக்க அருமையான நாடோடி இலக்கியத்தை எத்துணையோ பல அரிய முயற்சிகளின் பயனாக கவிஞர் சக்திக்கனல் அவர்கள் அச்சேற்றி நம் கையில் அளித்துவிட்டார். இதற்காகக் கொங்கு வேளாள மக்கள் மட்டுமின்றித் தமிழ் மக்கள் அனைவருமே அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளனர். | | |
|
|