பக்கம் எண் :

478அண்ணன்மார் சுவாமி கதை

ஓமம் வளர்த்துகிறாள் பொன்னருடன் பிறந்த உத்தமியாள் நல்லதங்கம்
ஓமப்புகை தணலும் உத்தமி வளர்க்கிறது ஓங்கிவளருதப்போ
மண்ணுக்கும் விண்ணுக்கும் அது மழைக்கால் விழுந்தாப்போல
கம்முது மேகமெங்கும் கருக்குது வான மெங்கும்
அதிருது லோகமெங்கும் அண்டமெங்கும் ஊடுருவ

ஓமப்புகை வளர்த்து உலகமெங்கும் தான் மறைக்க
உயர்ந்த பருவதம் போல் ஓமம் ஓங்கிக் கொழுந்துவிட
ஓமம் வளர்த்தாளே உத்தமி உலகமெங்கும் கம்மும்படி
ஓங்கி வளர்ந்து எமலோகம் பரலோகம் ஒன்றாக நிற்குதது
தெய்வலோக மெல்லாம் திசைகெட்டு மெய்மறந்து

ஒருவர் முகம் ஒருவருக்கு ஒன்றுந்தெரியாமல்
சிந்தை கெட்டு மெய்மறந்து தெய்வசபை குலைந்து
ஆதிசிவன் மாயவரும் அன்பான தேவர்களும்
இந்த அதிசயத்தை ஏதென்று நாமறிவோம்
நாலு உலகம் தானறியும் நாரதரைத் தானழைத்து

ஏது புதுமையென்று ஈஸ்வரனார் தான் கேட்க
அப்போது நாரதரும் ஆராய்ந்து தான் பார்த்து
அதிசயங்கள் ஒன்றுமில்லை அரனாரே நீர் கேளும்
கம்மல் விழுகிறதும் கருக்கல் வந்து கட்டுகிறதும்
புனல்கள் கவிகிறதும் புகைச்சல் வந்து மூடுகிறதும்

பூலோகம் தன்னில் புகழ் பெரிய காராளன்
நெல்லி வளநாடு நெற்சூழ்ந்த கோனாடு
சிற்றாளைப்பட்டிணத்தில் சேர்ந்த நெல்லி வளநாட்டில்
குன்றுடையா னென்றொருவன் குலக்கொழுந்து காராளன்
வளநாட்டுக் காராளன் மைந்தனில்லை யென்று சொல்லி

பொன்னம்பலத்தில் அவன் பேரு பெற்று வந்தவனும்
வயது பதினாறாய் வாங்கி வந்தான் இரண்டு மைந்தர்