பக்கம் எண் :

494அண்ணன்மார் சுவாமி கதை

அந்தமொழிகள் சொல்ல அத்தை மக்கள் படுகளத்தைப் பார்க்கவந்தார்
வலமாகச்சுத்திவந்து மைத்துனரை வாய்த்தமுகம்தான் பார்த்து
 
   அத்தை பிள்ளையை தங்கை எழுப்புதல்
 
நல்லத்தை புத்திரரே நீங்கள் நாடுபதம் பெற்றவர்கள்
செல்லத்தை புத்திரரே நீங்கள் சீமைபதம் பார்த்தவர்கள்
இன்னாள் இதுகாலம் உங்களை ஏறிட்டுப் பார்த்ததில்லை
ஏறிட்டுப் பார்த்ததில்லை உங்களை எதிர்த்து விழித்ததில்லை
சிவசோழ ராஜாவுடன் எங்கள் சின்னண்ணரும் பெரியண்ணரும்

காவல்கொண்டு அவர் சீமைகூட்டியே வாரபோது
கரிகாலர் சிவசோழர் சீமை அண்ணர் காவல்கொண்டு வாரபோது
அப்போ மணவறைப் பந்தலிலே என்னத்தா பெருமாளே
நீங்கள் வலமாக நிற்கையிலே வந்துமே நான்தானும்
அப்போ பந்தவெளிச்சத்திலே பார்த்ததுண்டு உங்கள்முகம்
அன்றுகண்ட திருமுகமும் அந்த அழகு குறையவில்லை
அன்றுமுதல் இன்றுவரை உங்களை அண்ணாந்து பார்த்ததில்லை
இனி அயலாரு மக்களுக்கு யாரழுகப் போவார்கள்
இனி ஊராரு மக்களுக்கு யார் அழுகப் போவார்கள்
மணவறைப்பந்தலிலே நீங்கள் மாலையிட்டுக் கொண்டிருந்தால்
உங்கள் கால்பணத்து மங்கலியம் என் கழுத்திலே பூண்டிருந்தால்
பொன்னுந் திருமேனியிலே உங்கள் படுகளத்தில் புழுதி புரண்டழுவேன்
பம்பைசுழட்டிவிட்டு உங்கள் படுகளத்தில் நான் அழுவேன்