கேட்டு வருவோமென்று கிருபையுடன் எழுந்திருந்து எல்லோரும் சேர்ந்து மாதாவிடம் இதமாகத் தான்போய் முக்கால் வலம் வந்து மூவிருகால் தெண்டனிட்டு காராளர் பொன்னர் சங்கர் கைகட்டி வாய்பொத்தி கூடவந்த படைத்தளத்தை குலைகாரர் தான்பார்த்து ஒரு பக்கமாக ஒதுங்கி நில்லுமென்று சொல்லி காராளர் பொன்னர் சங்கர் கைதனிலே வாளெடுத்து இருவ ரெண்டுபேரும் எதிர்த்து விளையாடலுற்றார் இடதுகையில் கேடயமும் இடுக்கியவர் தம்பிசங்கர் தத்தி நடையிட்டு தானிருவர் தான் பார்த்து வளநாட்டுக் கோட்டையிலே மற்பொருது நின்றாப்போல் இருவரும் மல்பொருதி எதிர்த்து விளையாடி இடசாரி பாய்ந்து வலதுசாரி சுத்திவந்து மாதாவைத்தானும் மற்றொரு கால் தெண்டனிட்டு எந்தாயே மாதாவே எனக்கு வரந் தந்தவளே சித்தன் மகளே நீ சிவனார் சுடர்மணியே வரத்தால் மிகுந்தவளே மகாதவசுக் குடையவளே சடையால் பெருத்தவளே சன்யாச மானவளே நீ உடுத்தும் புலித்தோலும் உள்ளாடை ஆசனமும் போற்றும் புலித்தோலும் புள்ளிமான் ஆசனமும் காவியுடையவளே கங்காளன் ரூபியம்மா குஞ்சிச்சடையுள்ளவளே கோகிலமே மாதாவே நாகமீன்ற கன்னியரே நாயகியே மாதாவே வீரமலை வெண்முடியில் வீற்றிருக்கும் உத்தமியே நாங்கள் வளநாட்டை விட்டு வனத்தில் வந்து மாண்டபின்பு இத்தனை நாளும் இருந்தோம் பரிவாரமாய் அந்த ஆதிசிவனார் அரனாரும் சொன்னபடி உந்தன்கைதனிலே ஒப்புவித்தார் கண்டாயே அன்று முதல் கொண்டு என் ஆனைபடை சேனைகளும் | | |
|
|