தந்தமது சுத்தி பண்ணி கம்பையன் தயவாக வாயலம்பி நாமம் தீர்த்தம் சேர்வை நன்றாய் முடித்துக் கொண்டு ஆசார வாசல் அன்புடனே வந்து இருந்து காரியக்காரர்களும் கனத்த பிரதானிகளும் எல்லவரும் கூடி இருக்குமந்த வேளையிலே
குதிரை லாயம் காவல் செய்யும் கொண்டப்பன் வந்து நின்று நம்ம லாயத்து குதிரையெல்லாம் நலமாக இப்போது காணமும் புல்லும் கடுகியே தின்பதில்லை போட்ட புல் போட்டதுபோல் புரண்டு கிடக்குமங்கே என்று சொல்லிகொண்டப்பன் இதமாயுரைத்து விட்டான்
அப்போது கம்பையனும் அவர் முகத்தைத் தான்பார்த்து இது என்ன காரணமாய் இருக்குதென்று தானுரைத்து ஒரு நாளுமில்லாத சொப்பனமுங் கண்டேனான் சொல்லி முடியாது நான் சொப்பனமே கண்டதுதான் இப்பக் குதிரைகளெல்லாம் குறுகுறுத்து நிற்கிறது
இது என்ன காரணமாய் இருக்குதென்று கம்பையனும் இரைக்கோலுக் கம்பளத்தார் எக்கிலியத் தொட்டியரை புதுவாடி தனிலிருக்கும் பொம்மண நாய்க்கரையும் சரக்கோடங்கி நாய்க்கரைத் தயவாய் வரவழைத்து கம்பளத்தாரெல்லோரையும் களரியங்கே தான்கூட்டி
பார்த்துமங்கே கம்பளத்தார் பல்லோர்கள் தான்கூட்டி சோதித்துப் பார்த்து துரை மகனைத்தான் பார்த்து இந்த வீரமலை வெண்முடியில் மெய்யாக வீற்றிருக்கும் அரியக்காள் பெரியக்காள் ஆண்மாருடைய கன்னி அந்த கம்பளத்து தெய்வ கன்னி அந்த கன்னிமுடி மாதாவும் காராளர் பொன்னர் சங்கர் காரணமாய்ப் பட்டவர்கள்