பக்கம் எண் :

524அண்ணன்மார் சுவாமி கதை

கரகம் தனை எடுத்து கைலாச லாடமுனி
திருமுடி மேலே வைத்து தேவி தனை நடக்க
நாட்டார் நடந்துமங்கே நாடி நடந்துவர
தேங்கி நின்று மாதாவும் தேம்பி மிக அழுது
ஏறிட்டுப் பார்த்தாளே எதிரில் நின்றநாட்டாரை

அப்போது பொன்னர் சங்கர் அவள்மேலே தான் பாய்ந்து
அதட்டியே பல் கடித்து ஆர்ப்பரித்துத் தான் பார்த்து
மாதாவைப்பார்த்து மந்திரவாள் கைவாங்கி
அண்ணருந்தம்பியரும் அண்டி விளையாடி
சிலம்பம் பொருதி சினந்து விளையாடி

மாதாவைக் கூட்டி வந்து மண்டபத்தில் தானும் வைத்து
ஊரார்கள் கூட்டி உற்ற மக்கள் பூசையிட்டு
ஊருக்கு ஊரு உத்தமர்கள் பூசையிட்டார்
வீட்டுக்கொரு பொங்கல் விதமாகத்தானும் வைத்து

பாளைக்கொரு துள்ளு குட்டி பாங்காகத்தானும் வெட்டி
ஆடு பன்றி கோழி அலங்கரித்தார் முப்பூஜை
பூஜை மிகப்போட்டு பொங்கலுடன் வீற்றிருந்தார்
கம்பையனும் பூஜை செய்து கனத்த மனுத்தான் வாங்கி
பட்டம் தனை ஆள்வதற்கு பாலன் வரங்கொடுத்தார்

இப்படியாக இவர்கள் இருந்தார்கள்
இந்தக் கதையதனை எழுதிப்படித்தவர்கள்
இன்னுமே சொல்லுமென்று இயல்பாகக் கேட்டவர்கள்
பெரியக்காண்டி தன்னருளால் பிரபலமாய் வாழ்ந்திருப்பார்
பொன்னர் சங்கர் கிருபையினால் புகழுடனே வாழ்ந்திருப்பார்

ஈஸ்வரனார் கிருபையினால் இயல்பாக வாழ்ந்திருப்பார்
ஆல்போல் தழைத்து அருகதுபோல் வேரூன்றி
மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார்
வாழிமிக வாழி வையகமும் வாழியவே!