பக்கம் எண் :

6அண்ணன்மார் சுவாமி கதை

கவிஞர் சக்திக்கனல்
 
     வானம்பாடி கவிதாமண்டலத்தைச் சேர்ந்த கவிஞர் சக்திக் கனலின் இயற்பெயர்
கல்வெட்டுப்பாளையம் பெரியசாமி பழனிசாமி. கொடுமுடி ஸ்ரீ சங்கர வித்யாசாலையில்
பள்ளிப் படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர் மீடியட்டையும், பி.காம்
பட்டப்படிப்பையும் முடித்தார். கூட்டுறவுப் பயிற்சி, இந்தியன் இன்ஸ்டிடியூட்
ஆஃப்ரோடு ட்ரான்ஸ்போர்ட் டிப்ளமா - இவை பட்டப்படிப்பைத் தொடர்ந்து பெற்ற
பட்டயங்கள்.

     மாணவராக இருந்தபோதே “வெடித்தது புரட்சி” என்ற காவியம் இயற்றினார்.
ஒன்பதாண்டுகள் கூட்டுறவுத் துறையில் பணியாற்றி பின்னர் அருட்செல்வர் டாக்டர்
நா.மகாலிங்கம் அவர்கள் நிறுவனமான ஏ.பி.டி.பார்சல் சர்வீஸில் கணக்காளராகச்
சேர்ந்தார். தற்போது அருட்செல்வர் அவர்களின் சக்தி அறக்கட்டளையின்
செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.

     அறுபதுகளில் கோவை நகரில் தமிழ்க் கவிதைப் பயிர் தழைத்து வளர்ந்தபோது
அமரர் ஜீவா நடத்திய கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டுக் கவியரங்கிற்கு
தோழர்மீ.மாரியப்பன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு திருச்சிற்றம்பலக் கவிராயர்
தலைமையில் “வள்ளுவர் கண்ட பொருளியல்” என்னும் தலைப்பில் கவிதை படித்தார்.
மரபில் நன்கு காலூன்றி புதுக்கவிதை வானில் கிளை பரப்பிய இவர் தமிழ்
எழுத்தாளர்களுக்கென ஒரு மன்றம் அமைத்தார். 48 கவிஞர்களின் கவிதைகளைத்
தொகுத்து “எழுக! கவிஞ!” என்ற தொகுப்பினை வெளியிட்டார். அத்தொகுப்பை
வெளியிட்டவர் அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் ஆவார்.

     சக்திக்கனல் கவிதைகள், கனகாம்பரமும் டிசம்பர்பூக்களும், நீங்கள் கேட்டவை,
தீரன் சின்னமலை, வெடித்தது புரட்சி என்பன இவரது கவிதை நூல்கள். ஏட்டுப்
பிரதியாக இருந்த ‘அண்ணன்மார் சுவாமி கதை’ என்ற நூலை அச்சிட்டு நாட்டு
மக்களுக்கு வழங்கிய திறன் இவருடையது. பல்கலைக்கழகங்களில் பாட நூல்களில் இடம
பெற்ற இந்நூல் வெளிவரப் பெரிதும் காரணமாயிருந்தவர் அருட்செல்வர் ஆவார்கள்.
கொங்கு நாட்டு மாவீரன் ‘தீரன் சின்னமலை’ கதையையும் காவியமாக்கித் தந்துள்ளார்.

     இவர் பதிப்பித்த அண்ணன்மார் சுவாமி கதையின் அடிப்படையில்தான் கலைஞர்
மு.கருணாநிதி ‘பொன்னர்-சங்கர்’ நாவலை எழுதியதாகக் குறிப்பிடுகின்றார். கோவை
ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டி, பாரதி இலக்கியப் பேரவை ஆகிய அமைப்புகளின்
தலைவராகத் திகழ்கின்றார்.

     பின் அட்டையில் : அருட் செல்வர் அவர்களிடமிருந்து வாழ்த்தும் பாராட்டும்
பெறுகிறார், திரு.சக்திக்கனல் அவர்கள்.