ஒன்றுமையோ ஒரு சமூகப் பிடிப்போ இல்லை என்பதையும் நாம் கசப்போடு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். பாகப் பிரிவினைக்காகத் தந்தையும் தனயனும் எதிர் எதிராக நின்று உயர்நீதி மன்றம் வரை வழக்காடுவதும் அண்ணன் தம்பி அடிதடிச் சண்டைகளும் கொங்கு வேளாளரின் குலதருமமாகக் கருதப்படுவதை நாம் மூடி மறைப்பதற்கில்லை! எனவே குன்றுடையான் வாழ்ந்த காலத்திலும் இப்பங்காளிக் காய்ச்சல் இருந்ததால்தான் அவன் நல்வாழ்வு வாழ்ந்தபோது பங்காளிகள் உறவு கொண்டாடிக் கொண்டே பொறாமை, சதி, சூது முதலியன செய்து அவனை அடுத்துக் கெடுக்க முயல்கின்றார்கள். அவனது திருமணத்தைத் தடை செய்து கொடுக்கப் பார்க்கிறார்கள். வறுத்த விதைச் சோளம் கொடுத்தும் தோட்டத்தைப் புழுதி உழவு செய்தும் பாழாக்குகின்றார்கள். ஆனாலும் நல்ல உள்ளம் படைத்து மசைச்சாமி குன்றுடையான் தோட்டத்தில் சோளத்தட்டில் முத்து விளைகிறது! பொன்னர், சங்கர், தங்கம் மூவரும் வரத்தால் பிறந்தவர்கள். அண்ணன்மார்களின் வீர விளையாட்டுகள், எதற்கும் அஞ்சாது துணிந்து செயல்படும் துணிவு - இவை கேட்பவர் நெஞ்சைச் சிலிர்க்க வைக்கின்றன. தாயார் தாமரை, தான் பட்ட இன்னல்களையெல்லாம் சொல்கிறார் மக்களிடம். அண்ணர் இருவர், தங்கம், வீரபாகுச் சாம்பான் எல்லோரும் கேட்கின்றனர். தாய் தான் செய்த சபதங்களையும் சொல்கிறாள். அண்ணர் இருவரும் பங்காளிகளைப் பழிவாங்கி அன்னையின் சபதத்தை நிறைவேற்றுகிறார்கள். வீரபாகுவும் அதை ஒழுங்காக நிறைவேற்றத் துணை நிற்கிறான். பெற்றோர் மறைவிற்குப் பின் பொன்னர், சங்கர் இருவருக்கும் திருமணம் நடக்கின்றது. ஆனால் தாயார் செய்த சபதத்தை நிறைவேற்ற மணப் பெண்கள் சிறை வைக்கப்படுகிறார்கள். | | |
|
|