100 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
கவிதைப் பெண் எண்சீர்விருத்தம் உணவில்லை உடையில்லை என்று வாட்டும் ஓயாத கவலையில்லை; அந்த நாளில் மணல்நின்று கடல்கண்டேன் வானில் நிற்கும் மதிகண்டேன் மலர்கண்டேன் வயல்கள் கண்டேன் தணல்கூரும் கதிர்கண்டேன் அங்கங் கெல்லாம் தணியாத காதலுடன் கவிதை என்னும் அணங்கிருந்து புன்னகைத்துக் கடைக்கண் ணோக்கால் அருகழைப்பாள் பேசாமல் நானி ருப்பேன் இதழ்விரித்துத் தென்றலெனப் பாட்டி சைப்பாள் எழில்மயிலாய்த் தோகைவிரித் தாடி நிற்பாள் விதவிதமாம் நிறங்கொண்ட துகிலு டுத்து விளையாடிச் செவ்வானில் காட்சி நல்கப் புதுமாலைப் பொழுதாகி நின்றி ருப்பாள் பூமணத்தை வீசிடுவாள் மயங்கி ருட்டில் மதிமுகத்தைக் காட்டிடுவாள் எனைம யக்கி வந்தணைப்பாள் இன்பத்தைக் கண்டு ணர்ந்தேன் உயிராகி உணர்வாகி என்ன கத்தே ஊடாடிச் சொல்லரிய மகிழ்வ ளித்துச் செயிரேதும் இல்லாத காதல் கொண்டு சேர்ந்துறைந்தாள்; சின்னாளில் செம்பொற்றாலிக் கயிறதுவால் பெண்ணொருத்தி மனைவி யானாள் இல்லறத்துக் கடன்பலவும் முறையாப் பேணி வயிறுநிறை செயலொன்றே தலையா எண்ணி வாழ்ந்தேன்நான் ஆயினுமோர் சுவையே யில்லை |