வீரச்செல்வி காதலுக்குத் தரணிதரும் பரிசை நெஞ்சில் கருதிமனம் வெதும்புகிற வேளை தன்னில் சாதலுக்குத் துணிந்தொருத்தி முயல்வாள் தன்னைச் சந்தித்தேன்; உனக்கென்ன நேர்ந்த தம்மா! ஓதுததற்கு மனமுண்டோ? உரைப்பாய் என்றேன்; “உரைப்பேன்”என் றவள்துயரை விரித்து நின்றாள்; “ஏதமிலா வீரமெனப் பெயரும் கொண்டேன் எடுப்பார்கைப் பிள்ளைஎன வளர்ந்தேன் நானும் மோதுகின்ற எப்பகைக்கும் அஞ்சா நெஞ்சன் முரணாத கொள்கைப்பற் றுள்ளான் தன்னைக் காதலித்தேன்; கொள்கையிலாப் பச்சை யோந்திக் கருத்துடைய ஒருவற்கு மணமு டித்தார்; பேதலித்தேன், காதலற்கோ இடும்பை என்னும் பெண்ணொருத்தி துணையானாள்; பாழும் பாரில் சாதலைத்தான் மேற்கொண்டேன்” என்று ரைத்தாள் சலித்துப்போய்ச் சிந்தனையைக் கலைத்து விட்டேன் 8 |