விறகு வெட்டி அறுசீர்விருத்தம் மனிதரின் நிலைமை கண்டு மனத்தினில் கவலை கொண்டு தனியிடம் சென்றேன் ஓர்நாள்; `தடியனே மூடா!’ என்று முனியனை அடித்துக் கையை முறுக்கியே இழுத்துச் சென்றார். `இனிஎனை அடிக்க வேண்டாம் இமைப்பினில் இறப்பேன் ஐயோ!’ என்றவன் குரலைக் கேட்டேன் இடிந்ததென் உள்ளம் ஆங்கே; கொன்றிடும் கூட்டத் தோடும் கோட்டையுள் நுழைந்தேன்; நீதி மன்றினில் தலைமை தாங்கும் மனிதரும் வினவ, ஓய்ந்து குன்றிய உயிரைத் தாங்கும் கூலியும் வாய்தி றந்தான் `இரண்டுநாள் உண்டே னில்லை, இருமலால் துடித்தாள் பெண்டு; சுருண்டன பிள்ளை எல்லாம் சோற்றுநீர் இன்மை யாலே, இரந்துயிர் வாழ்வ தற்கும் என்மனம் இடந்த ராமல் விரைந்துநான் விறகு வெட்ட வெளிப்புறக் காட்டில் சென்றேன் |