பக்கம் எண் :

108கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

காய்ந்தஓர் மரத்தில் ஏறிக்
    கடிதினில் வெட்டும் போழ்து
தேய்ந்தஎன் உள்ளம் நோவத்
    திட்டினார்; இறங்கி வந்தேன்;
ஓய்ந்தஎன் உடலில் குச்சி
    ஒடிந்திட அடித்தார்; கீழே
சாய்ந்தபின் நடந்த தேதும்
    சற்றுமே அறியேன்’ என்றான்

`மற்றவர் காட்டிற் சென்று
    மரத்தினை வெட்டி னேனென்
றுற்றதை உரைத்தாய்! சிறையில்
    ஒன்றரை மாதம் தங்கு!
மற்றது மறுத்தா யாகில்
    மரத்தினில் விறகு வெட்டி
விற்றதில் ஐந்து ரூபா
    வைத்திடு வெளியில் செல்வாய்!’

என்றனர் அறத்தைக் காப்போர்;
    இடிதலை வீழ்ந்த தென்ன
நின்றனன்; நிமிர்ந்து கண்ணில்
    நீரினைச் சொரிந்தான்; `ஐயோ!’
என்றனன், `ஏழை காசுக்
    கெவ்விடம் செல்வேன்; என்னைக்
கொன்றிடல் நன்றாம்; ஈசன்
    கொடுத்ததிவ் விதியோ?’ என்றான்

விதிவிதி என்று மக்கள்
    வீணினில் மாய்ந்து, சூழ்ச்சிச்
சதியினில் சிக்கி அந்தோ!
    சாய்ந்திடும் நிலைமை கண்டும்
மதியொரு சிறிது மின்றி
    மாற்றிட மனமு மின்றி
வதிவது நன்றோ? நாட்டீர்!
    வளமிகக் காண்போம் வாரீர். 7

(ஊர்ப்புறத்தே ஒரு மரத்தில் விறகு வெட்டிக் கொண்டிருந்த ஒருவனை அடித்துத் துன்புறுத்திய கொடுமையைக் கண்டு மனம் நொந்து பாடிய பாடல்.)