*குதிரை நினைத்தால்....? எண்சீர் விருத்தம் கத்திரியால் அழகுசெய்த பிடர்நி மிர்த்துக் கடிவாளம் கவ்விச்செல் புரவி மீது மெத்தையமைத் தோரிளைஞன் அமர்ந்தி ருந்தான் மெதுவாகச் செல்லமனம் ஒருப்ப டாமல் வித்தைபயில் குதிரையென விரைய வேண்டி விரித்துவிட்டான் கைச்சவுக்கை; அடியும் பட்டுப் பத்துமடங் கதிகரித்த வேகங் கொண்டு பறந்ததுவே அப்புரவி, செல்லுங் காலை “தூக்குவது போதாதோ? இவனை நீண்ட தொலைவுள்ள ஊருக்குச் சுமந்து வந்தேன் தாக்குகிறான் கைச்சவுக்கால் கெடுவான் என்ன, தருகின்ற உணவுக்கா இந்தத் தொல்லை? போக்கற்ற உலகத்தில் குனிந்து தந்தால் பொல்லாத மனிதரவர் எல்லாம் செய்வர்; காக்கின்ற உழைப்பாளி ஓட ஓடக் கனவான்கள் விரட்டுகிறார்” என்ற எண்ணம். உள்ளத்தை உறுத்தியதால் வேகங் குன்றி ஊர்ந்துசெல, மேலமர்ந்த காளை நன்கு பள்ளத்தை உண்டாக்கும் வண்ணம், காலைப் பதித்துள்ள செருப்பாணி தாக்கச் செந்நீர் வெள்ளத்தைப் பாய்ச்சியது புரவி மேனி; விளையாட்டா அவனெண்ணி விட்டான்; மேலும் மெள்ளத்தான் செல்கிறதென் றெண்ணிச் சாட்டை மேன்மேலும் சுழற்றிவிட்டான் விரைந்து செல்ல |