பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்11

பாரதியைப் பாருங்கள். தமிழ் என்றால் தேனூறும் நன்னெஞ்சம் அவன் நெஞ்சம். தமிழ் நாட்டுப் பெயர் கேட்டால் தேன் பாயும் இரு செவிகள் அவன் செவிகள். தமிழினத்தைப் பாடுங்கால் பூரிக்கும் இருதோள்கள் அவன் தோள்கள். இத்தகையான் குறுகிய மனத்தவனா? கூறுங்கள். கவிஞன் என்பவன் நுண்மை மிக்க உணர்வுடையவன். நாட்டுப் பற்றின் உயர்ந்த எல்லையையும், மொழிப் பற்றின் ஆழ்ந்த எல்லையையும், இனப் பற்றின் விரிந்த எல்லையையும் கவிஞன் ஒருவனிடந்தான் காணமுடியும். கவிஞனுக்கு இயல்பாக இருக்க வேண்டிய இவ்வுணர்வுகளையே குறுகிய மனம் என்று குறை கூறுவது முறையாகுமா?

பிறந்த மண்ணில் காலுன்றாமல், உண்ட சோற்றுக்கு நன்றி காட்டாமல், உணர்வூட்டிய மொழிக்குத் துணையாகாமல் பரந்த மனப்பான்மை பேசும் விரிந்த அறிவு எதற்கு? அந்தக் கூட்டத்தில் சேராததால்தான் முடியரசன் சிறப்புடைய கவிஞராகத் திகழ்கிறார், இவரது பாடல்களில் வரிக்குவரி, சொல்லுக்குச் சொல் இவ்வுணர்வுகள் விரவிப் படிப்பவர்களைப் பண்புள்ளவர்களாக்கும் பான்மையுடன் திகழ்கின்றன. இவற்றைக் குறை என எண்ணுவோர் இருந்தால், அவர்கள் நெஞ்சம் இனியேனும் நிறைவுறுக என வாழ்த்துவோம்.

V

கவிதையை மதிப்பிட அதன் வடிவம், கற்பனை, கருத்து, நடை, சொல்லாட்சி, உணர்ச்சி, உணர்த்தும் முறை, அணி நலம், சுவை - இனையன பல அளவு கோல்களாகும். இவை அனைத்தையுமே கொண்டு எல்லாக் கவிதைகளும் விளங்குவன என எண்ணுதல் கூடாது. ஒரு கவிதைக்கு நிலைத்த வாழ்வும் பெருகும் புகழும் தர இவற்றுள் சில நலங்கள் மட்டும் அமைந்திருந்தாலும் போதும். ஒன்றிரண்டு பகுதிகள் மட்டும் தனிச் சிறப்புடன் அமைந்திருந் தாலும் போதும்.

கவிஞர் முடியரசனின் கவிதைகளைக் கற்பவர்கள், இவற்றுள் பல நலங்களையும் பெற்று அவை விளங்குவதை உணர்வர். வற்றாத கருத்தென்னும் வளமான கடலின் கண். அரிய உணர்வென்னும் ஆராத அலைமேலே. பாட்டுத் திறத்தோடு மனங்கவரும் கற்பனை யாம் பாய்மரத்துக் கலமேற்றி, எழிலே உருவான இன்பக்கரை நோக்கி நம்மையெல்லாம் அழைத்துச் செல்லும் இலக்கியம் இது.