12 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
வண்டுகள் மலர் தோறும் சென்று தேனை உண்டு வருவது. “கடன்பட்ட மாந்தரிடம் வட்டி கேட்கக் கடைதோறும் புகுந்துவரும் கணக்கனைப்போல்” இருக்கிறது என்கிறார். காலத்திற்கு ஏற்ற உவமை என்பீர்கள். அது மட்டுமன்று, கவிஞர் வாழ்ந்த காலத்துக் கொடுமைகளுள் ஒன்றை, உள்ளபடி காட்டும் கண்ணாடியும் ஆகும். இவ்வாறு பாடிச் செல்லும் வண்டை `அடைபட்டுக் கிடக்க வெனச்’ சொல்லி `அல்லிமலர்க் கூட்டம்’ குவிந்து கொண்டதாம். இக்கற்பனை, இத்தகைய கொடுமைகட்கு எதிர்காலத்தில் எத்தகைய முடிவு உண்டு என்பதையும் நமக்குச் சொல்லி வைக்கின்றது. நீங்கள் பொதுக் கூட்டங்களுக்குப் போயிருக்கிறீர்கள். அங்கு ஒரு கட்சிக்காரர் பேசும்போது, மற்ற கட்சிக்காரர்கள் குழப்பம் விளைவிப்பதுண்டு. இது முறையாகுமா? வெறும் வன்முறைச் செயலுக்காக அஞ்சி, மதியுடையவர்கள் மீண்டும் மேடை ஏறாது இருப்பார்களா? இக்குழப்பம், இந்த உலகத்தில் மட்டுமென்ன, வானுலகத்திலும் நடைபெறுகிறது. விண்மீன்களின் பெருங் கூட்டத்திடையே மதியர் என்னும் அம்புலியைர் மேடை ஏறிச் சொற்பொழிவு செய்கிறார். இதைப் பொறுக்காத எதிர்க்கட்சி முகிலன் விளக்கை அணைத்து ஒளியை மறைத்தான். இடியிடித்துக் குழப்பத்தை உண்டாக்கினான். முடிவு என்ன? மீண்டும் அமைதி நிலவுகிறது. கூட்டம் கலையவில்லை. மதியர் மீண்டும் மேடை ஏறிவிடுகிறார். விடியும் வரை சொற் பொழிவு திகழ்கிறது. “ மதியுடையார் பேசுவதைக் கேட்டல் நன்று மாண்பு வரும் எனக்குழுமும் வீண்மீன் கூட்டம் அதுமகிழ வானத்து மேடை ஏறி அம்புலியார் சொற்பொழிய முகிலன் ஓடி எதிரியெனக் கூட்டத்துள் ஒளிம றைத்தான் இடியிடித்தான் குழப்பத்தை ஆக்கி விட்டான் இதிலென்ன கண்டனனோ? மதியர் நாளை ஏறாமல் இருப்பாரோ மேடை மீது?’ |