பக்கம் எண் :

112கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

துன்பமடா துன்பம்!

துன்பமடா துன்பம் - வறுமைத்
துன்பமடா துன்பம்

பசித்துயரால் சிறுமகவு பால்சுவைக்கப் பாலின்றிப்
பரிந்தன்னை முகம்நோக்கப் பாவையவள் நீர்ததும்ப
நசித்துருகும் மனத்தோடு நயனத்தால் பேசுகின்றாள்
நானென்ன சொல்லிடுவேன்? மரமுண்டு கயிறுண்டு

(துன்)

எத்தனைநாள் பட்டினியால் இன்னலுற்று வாழ்ந்திடுவோம்
இன்னல்தரும் நோய்வந்தே இருவரையும் பற்றியது
பித்தனைப்போல் மருத்துவன்பால் சென்றுநிலை கூறியதும்
பணமிருந்தால் பேசென்றான் என்செய்வேன் பேருலகில்

(துன்)

மாள்வதற்கு விட்டாரா? மாட்டிவிட்டார் கைவிலங்கு
மனிதனுயிர் காப்பதற்கோர் வகையுண்டா? நலிவுதுடைத்(து)
ஆள்வதற்கும் கற்றாரா? அதுவுமில்லை! இந்நிலையில்
அறமெங்கே? வாழ்வெங்கே அன்பூறும் வழியெங்கே

(துன்)