பட்டண வாழ்வு எண்சீர் விருத்தம் பட்டணத்தைப் பார்ப்பதற்கு நீண்ட நாளாப் படிந்திருந்த ஆர்வந்தான் தூண்ட ஓர்நாள் துட்டெடுத்துப் புகைவண்டி ஏறிச் சென்றேன் சொல்லரிய காட்சிஎலாம் கண்டேன் கண்டேன்; விட்டெரிக்கும் விளக்குண்டு, `விர்’ரென் றோடும் விசைவண்டி பலவுண்டு, கப்ப லோடு கட்டுமரம் மிதந்தாடும் கடலும் உண்டு, கரடிபுலி காட்டுகிற நிலையம் உண்டு, மக்களுக்குச் சட்டத்தால் அறம்வ ழங்கும் மாமன்றம் உண்டு, கடற் கரையின் ஓரம் எக்களித்துத் திரிகின்ற பெண்கள் பள்ளி எழில்காட்டி நிற்பதுண்டு, உயர்நூல் சேர்ந்த தக்கஒரு நூல்நிலைய இருப்பும் உண்டு, தனலால்கள் குழுவுண்டு, எழில்சேர் மாதர் தொக்கிருக்கும் மயிலாப்பூர் அல்லிக் கேணி தொடர்ந்திருக்கும் தியாகநகர் அதுவுங் கண்டேன் இன்னும்பல் காட்சிகளைக் கண்ட பின்னும் இன்பத்தைக் காணவில்லை, எனது நெஞ்சு துன்புற்றுத் துன்புற்றுத் துடிக்கு தந்தோ தொழிலாளர் நிலைகண்டு; மூச்சு வாங்க இன்னலுற்றுச் சுமைவண்டி `ரிக்ஷா’ வண்டி இழுக்கின்ற விலங்குநிலை மாந்தர் கண்டேன். துன்னுமழை வெய்யிலிலும் வழியின் ஓரம் துணையோடு வாழ்கின்ற மக்கள் கண்டேன். |