116 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
வேண்டிக் கொண்டேன் விரைந்தன சின்னாள்; ஓய்ந்தது நோயும் உழைத்துழைத் தில்லாள் ஊட்ட ஊட்ட உடலுரம் பெற்றேன்; உற்றார் சொன்ன உரைதவ றாமல் காளைகள் காட்டிக் கடன்பணம் பெற்றுத் திருப்பதி சென்றேன் திருவருள் பெறவே; அருச்சனை செய்யவும் முடிஎடுப் பதற்கும் இரண்டு சீட்டுகள் ஈந்தனர்; அவற்றை அன்பால் பணிவால் அருச்சகர்க் களித்தேன்; இரண்டில் ஒன்றை என்கையிற் கொடுத்து, “முடிஎடுக்க அங்கே முதலிற் செல்வாய்” என்றோர் நாவிதர் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டச் சுருக்கெனச் சொன்னேன்; நாவிதர் எடுக்கவா நானிங்கு வந்தேன்? உள்ளூர் நாவிதர் உண்டு பலபேர், அவரை ஒதுக்கி ஆண்டவன் தனக்கே வைத்துளேன் முடியை, வம்புசெய் யாமல் நீரே எடுத்தருள் புரிவதே நேர்மை என்றேன் அருச்சகர் எரிந்து விழுந்தார்; “அற்பனே! இவ்விடம் அருச்சனை மட்டும் நடத்துவோம் நடந்திடு அங்கே” என்றார்; அருச்சனை மட்டும் ஆண்டவர் ஏற்பார் முடிநீர் எடுத்தால் முகஞ்சுளிப் பாரோ? என்றேன்; அங்கே இருந்த பட்டை நாமம் போட்டவர் “நாயே பேயே” என்றெல்லாம் பேசி இடித்தார் அடித்தார்; ஐயா என்னை அடிக்க வேண்டாம் உயர்ந்த சாதியை உவப்பார் கடவுள், நாவிதன் தாழ்ந்தவன் நயவார் அவனை என்றதால் இவரை என்முடி எடுக்க வேண்டினேன் தவறோ? விளம்புவீர்! என்றேன்; “பட்டிக் காட்டான் பட்டிக் காட்டான்” என்றெனை இகழ்ந்தார் அங்கிருந் தோரோ. 59 |