பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்117

புலியேறென எழுவாய்

பதினாறுசீர்ச் சந்த விருத்தம்

உழுவார்கரம் உயர்வாய்வர
    உலகோர்முயல் திருநாள்
உனதாகிய திருநாடொரு
    தமிழ்நாடென வருநாள்
குழுவார்கழை பிழிபாகுடன்
    முறியாமுனை அரிசி
குழைவாயமு துணவாகிடக்
    குலமாதர்கள் தருநாள்

எழுஞாயிறு புலர்காலையில்
    எழில்வான்மிசை வருமே
இதுநாள்வரை துயராய்வரு
    பனிநாள்இனி அறுமே
தொழுவாய்கதிர் தொழுவாய்கதிர்
    சுடரால்நலந் தரலால்
சுடுவாய்பகை விடுவாய்மயல்
    துணிவாயெழு தமிழா

புழுவாவுனை இகழ்வார்முனம்
    புலியேறென எழுவாய்
பொதுவாழ்வினில் நிலையோடிரு
    புதுவாழ்வினை அடைவாய்
தொழுதேவளர் உடல்வாழ்வது
    தொலையாயெனில் உனையே
தொழுநோயொடு திரிவாரினும்
    இகழ்வாரிதை நினைவாய்