பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்119

மொழியுணர்ச்சி

எண்சீர் விருத்தம்

இலைபொறுக்கும் நாயுடன்தன் திறமை காட்டி
    எச்சிலுணும் மனிதனெனும் உருவங் கண்டும்,
குலைநடுங்கப் பெண்ணினத்தை அடிமை யாக்கும்
    கொடுமையினைக் கண்மூடிப் பழக்கந் தன்னை
நிலைநிறுத்தப் பாடுபடும் நிலைமை கண்டும்,
    நேர்மைபகுத் துணரறிவு கல்வி இல்லா
நிலையிருக்கக் கண்டிருந்தும் உணர்ச்சி காணா
    நெஞ்சத்தார் மிக்குவரும் நாளில் இங்கு

மொழியுணர்ச்சி பாடுகென்றீர்! உணர்ச்சி கூர்ந்து
    மொழியுங்கால் பிழைபொறுத்துச் சிந்தித் தாய்ந்தால்
பழியுணர்ச்சி தோன்றாது; வருவோன் செல்வோன்
    பழிக்கின்றான் நம்மொழியை செவிம டுத்தும்
எழுமுணர்ச்சி கண்டோமா? வடக்கு வேந்தன்
    இழித்துரைத்தான் தமிழரசை எனுஞ்சொற் கேட்டு
முழுமூச்சோ டெதிர்த்தானே அவன்கு லத்து
    முளைத்துவரும் காளைகள்நாம் வெட்கம் வெட்கம்

ஆங்கிலமோ பிறமொழியோ பயின்று விட்டால்
    அன்னைமொழி பேசுதற்கு நாணு கின்ற
தீங்குடைய மனப்போக்கர் வாழும் நாட்டில்
    தென்படுமோ மொழியுணர்ச்சி? ஆட்சி மன்றில்
பாங்குடன்வீற் றிருக்குமொழி தமிழே என்று
    பகர்நாளில் மொழியுணர்ச்சி தானே தோன்றும்;
ஈங்கதற்கா என்செய்யப் போகின் றீர்நீர்?
    இளைஞரினி விழித்தெழுந்தால் விடிவு தோன்றும்