பக்கம் எண் :

120கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

ஆந்திரமும் கன்னடமும் சென்று வந்தேன்
    அங்கெல்லாம் மொழியுணர்ச்சி விளங்கக் கண்டேன்
மாந்தரெனத் திரிகின்றோம் உணர்ச்சி யற்று,
    வந்தவர்க்கும் போனவர்க்கும் பல்லைக் காட்டிச்
சாந்துணையும் காக்கைபிடித் தலைந்து சென்று,
    சாப்பாடே குறிக்கோளாய் மொழியைத் தாழ்த்தி
வாழ்ந்திருக்க நினைக்கின்றோம்; படையெ டுத்து
    வந்தமொழி வாழவழி செய்து தந்தோம்

பிறமொழியை வெறுக்கின்றேன் என்று சொல்லிப்
    பிழையாகக் கருதாதீர்! தமிழை யிங்கு
மறுவறநன் குணர்ந்ததற்பின் பயில்க என்பேன்;
    மனைவியைமற் றொருவன்பால் அடகு வைத்துத்
துறவறமேற் கொளலாமோ? தாய்த வித்துத்
    துடித்திருக்க அறஞ்செய்ய முனைதல் நன்றோ?
கறவையிடம் பால்கறந்து கன்றுக் கின்றிக்
    கதறிவிழக் கடவுளென்று சிந்தல் நன்றோ?

மறுமலர்ச்சி எனும்பேரால் தமிழின் பண்பை
    மாய்க்கின்றோம்; மொழியிருக்கப் `பாஷை’ என்போம்.
பெறுமகிழ்ச்சி `சந்தோஷம்’ ஆகும்; வேட்டி
    `வேஷ்டி’ எனப் பெயர்மாறும்; பதற்றம் என்னோம்
மறுமொழிபோல் பதஷ்டமெனக் குதிப்போம்; தண்ணீர்
    ஜலமாகும்; மறைக்காடு `வேதா ரண்யப்’
பிறமொழியாய் மாறிவிடும்; மொழியு ணர்ச்சி
    பிழைத்திருக்க இடமுண்டோ? புதைத்து விட்டோம்

வணக்கமெனச் சொல்பவரைக் கட்சி சார்த்தி
    வாட்டுகிறோம்; “தாய்மொழியைப் புதைத்து விட்டுப்
பிணக்கல்லில் வரவேற்பு நல்கல் வேண்டேன்
    பிறமொழியின் அடிமைகளே” என்று சொன்ன
குணக்குன்றாம் நம்காந்தி எந்தக் கட்சி?
    குறிக்கோளா வங்கமொழி வளர்ப்பான் வேண்டிப்
பிணக்கின்றிப் பலநூல்கள் தந்த தாகூர்
    பேணினரே மொழியுணர்ச்சி எந்தக் கட்சி?