பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்121

தமிழ்மொழியை உயர்தனிச்செம் மொழியாம் என்று
    தகுமுறையில் ஆராய்ந்து முடிவு சொன்ன
தமிழ்மகனார், பரிதிமாற் கலைஞன் என்று
    தமிழ்மொழியிற் பெயர்கொண்டார் எந்தக்கட்சி?
அமுதமெனத் தாய்மொழியைப் போற்றும் நாடு
    வீழ்ந்ததில்லை, அதைத்தூற்றி வாழ்ந்த நாடும்
தமதறிவிற் கண்டதில்லை என்று ரைத்த
    தமிழாசான் முத்துசிவன் எந்தக் கட்சி?

மணவினையில் தமிழுண்டா? பயின்றார் தம்முள்
    வாய்ப்பேச்சில் தமிழுண்டா? மாண்ட பின்னர்
பிணவினையில் தமிழுண்டா? ஆவ ணத்தில்
    பிழையோடு தமிழுண்டு; கோவில் சென்றால்
கணகணவென் றொலியுண்டு; தமிழைக் கேட்கக்
    கடவுளரும் கூசிடுவர்; அந்தோ! அந்தோ!
அணுவளவும் மொழியுணர்ச்சி இல்லா நாட்டில்
    ஆத்திகரே இறையுணர்ச்சி வளர்வ தெங்கே?

உடுக்கின்றார் உண்கின்றார் உயர்வுங் கொள்வார்
    ஒப்பற்ற தமிழ்மொழியால்; நன்றி இன்றிக்
கெடுக்கின்றார் அதன் வளர்ச்சி நேரில் சில்லோர்;
    கேண்மையொடு வளர்த்திடுவோம் என்றுசில்லோர்
கொடுக்கின்றார் நஞ்சுதனைக் கூசா திந்தக்
    கொடுமைகளை நீக்கிடவே ஆவி தானும்
விடுக்கின்றோம் தாய்மொழிக்கே என்று சொல்லி
    வீறுற்று நிமிர்ந்தெழுவீர் தமிழ்நாட் டீரே!

தமிழ்காக்கப் போர்செய்ய உணர்வு வேண்டும்
    தமிழ்கொன்று வாழ்கின்ற கயமை வேண்டாம்
தமிழ்காக்கப் போர்செய்யப் புலிகள் வேண்டும்
    தடுமாறி ஓடிவிடும் எலிகள் வேண்டாம்
தமிழ்காக்கப் போர்செய்ய சிங்கம் வேண்டும்
    தாளமிடும் ஓலமிடும் நரிகள் வேண்டாம்
தமிழ்காக்கப் போர்செய்ய மானம் வேண்டும்
    தாலமுத்து நடராசன் துணிவு வேண்டும். 11

(காரைக்குடி, அழகப்பர் கலைக்கல்லூரியில் திரு.ப. துரைக் கண்ணு முதலியார் தலைமையில் பாடப்பெற்ற பாடல்.)