பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்123

மனிதரினம் முதன்முதலில் பேசக் கற்ற
    மாண்புயர்செந் தமிழணங்கோ என்றால், இன்பம்
கனிதெலுங்கு மலையாளம் துளுவம் இன்னும்
    கன்னடமாம் எனுமக்கள் நான்கு பெற்றும்
தனியிளமை குன்றவிலை தளர்வும் இல்லை
    தலைச்சிந்தா மணிசிலம்பு மேக லைப்பூண்
தனியழகு பொலிவுபெற மனத்தை ஈர்க்க
    நடக்கின்றாள் சிரிக்கின்றாள் அந்த நங்கை

ஆதலினால் தமிழின்பம் உயர்ந்த தென்றார்
    அதற்கவரை வெறுத்துவிடல் அழகோ! என்றன்
மாதரசே எனவுரைத்தேன், `போங்க ளத்தான்
    மறைமொழியால் கேலிஉரைக் கின்றீர்!’ என்றாள்;
காதலியே கேலியில்லை தமிழ்சு வைத்தால்
    கவலைஎலாம் பறக்குதடி! தளர்ச்சி நோயும்
ஏதடி?என் இன்னமுதே! என்றன் உள்ளம்
    இன்பத்துள் மூழ்குதடி! என்று சொன்னேன்;

இலக்கணமாம் உலைக்கூடத் திருத்தி விட்டுத்
    தனித்தமிழாம் இன்மொழியாம் என்று சொல்வீர்
கலைச்சங்க நூலென்பீர்! இரும்பாற் செய்த
    கடலைகளே அவையெல்லாம்; தமிழை இந்த
நிலைக்காக்கி விட்டீரிங் கெப்ப டித்தான்
    நிலைத்திடுமோ உமதுதமிழ்?’ என்று கேட்டுக்
கலக்கிவிட்டாள் என்மனைவி; அன்புப் பேதாய்!
    கண்டபடி உளறிவிட்டாய்! ஒன்று கேட்பாய்!

வயலுக்கு வரப்பொன்றும் வேண்டா மென்றால்
    வளக்கரைகள் ஆற்றுக்கு வேண்டாமென்றால்
இயல்மொழிக்கும் இலக்கணமே வேண்டாம் பெண்ணே!
    இயலறிவும் மொழியறிவும் இல்லார் சொல்லும்
மயல்உரையை நம்பாதே! மொழியைக் காக்கும்
    வரம்பிலையேல் எம்மொழியும் அழிந்து போகும்
கயல்விழியே! சங்கத்து நூல்கள் எல்லாம்
    கண்டதுபோல் வல்லிரும்புக் கடலை என்றாய்!