பக்கம் எண் :

124கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

புரைபட்டுப் போகுதடி என்றன் உள்ளம்
    பொல்லாத சொல்லினைத்தான் சொல்லி விட்டாய்!
நரைபட்டுப் பல்லிழந்தோன் முறுக்குத் தின்றால்
    நலமென்றா சொல்லிடுவான்! இரும்பாம் என்பான்;
குறைபட்ட அரைகுறைகள் உணரும் ஆற்றல்
    இன்மையினால் கூறுவதைக் கேட்டு விட்டு
நிறைவுற்ற புலவோரைச் சங்க நூலை
    நிறுத்துரைக்கும் இலக்கணத்தைப் பழித்தல் நன்றோ?

ப`வானொலியில் நேற்றொருவர் பேசக் கேட்டேன்
    வந்தசில ஐயங்கள் நும்பால் சொன்னேன்
தேனொழுகும் மொழிபுகல்வீர் என்றி ருந்தேன்
    திட்டுகின்றீர் மன்னியுங்கள் அத்தான்!’ என்றாள்;
நானெதுவும் திட்டவிலை, தமிழால் வாழ்வோர்
    நன்றிகொன்று திரிவதைத்தான் ஒப்ப வில்லை;
ஏனொதுக்கம்? இப்படிவா! எனக்கை பற்றி,
    எழுகின்ற ஐயங்கள் புகல்க என்றேன்

`கேட்கின்றேன் என்மீது சினங்கொள் ளாதீர்?
    கிளர்மூச்சும் உடல்பொருளும் தமிழே, வாழும்
நாட்பொழுதும் தமிழ்மொழிக்கே’ என்று சொல்வீர்!
    நன்றுநன்று; நாம்மணந்த திருநாள் தன்னில்
கேட்கவில்லை தமிழ்ஒலியே எதையோ கேட்டோம்
    கிடக்கட்டும் நாம்வணங்கும் கோவி லுள்ளே
கேட்கிறதா அவ்வொலிதான்? பிள்ளை பெற்றோம்
    கிறுக்கரைப்போல் பிறமொழியில் பெயரும் வைத்தோம்

இந்நிலைதான் போகட்டும் இந்த நாட்டில்
    எங்கிருந்தோ வந்தமொழி நம்மை ஆளல்
நன்னிலைஎன் றெண்ணிவிட்டோம் உணர்வும் அற்றோம்
    நலம்பெறுமா உருப்படுமா தமிழ்தான்? என்றாள்;
என்னுளத்தே சுருக்கென்று தைத்த(து) ஆம்ஆம்
    எழுச்சியுரை முழக்குகிறோம் செயலிற் காட்ட
முன்வருதல் சிறிதுமிலை அந்தோ! என்று
    முணுமுணுத்தேன் பேசவில்லை வெட்கம்! வெட்கம்!