பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்125

கொஞ்சுமொழி வஞ்சி!எனைத் திருத்தி விட்டாய்
    கூறுவதைச் செயலுக்குக் கொணர்வேன்; நம்பால்
தஞ்சமென வந்தவரின் சூழ்ச்சி யாலே
    தமிழ்வழங்காக் கோவிலுள்ளே தலையைக் காட்டேன்
எஞ்சியுள குழந்தைக்குத் தமிழ்ப்பேர் வைப்பேன்
    இப்படியே என்வீட்டைத் தமிழ்வீ டாக்க
வஞ்சினமும் கொள்கின்றேன் என்று சொன்னேன்.
    வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்; ஏன்சி ரித்தாய்?

என்றேன்நான்; `கோவிலுக்குப் போகா விட்டால்
    இனியதமிழ் எழுச்சிபெற்று விடுமா என்ன?
நன்றத்தான்! தமிழ்நாடும் கோவில் மன்றும்
    நாதியற்ற சொத்தா?உம் சொந்த மன்றோ?
வென்றந்த உரிமை பெற வீரம் இல்லை?
    ஏனத்தான் வீண்பேச்சு? போதும் போதும்!’
என்றுரைத்தாள்; தோழர்களே! உம்பாற் சொன்னேன்
    என்செய்யப் போகின்றீர்? ஆய்ந்து சொல்லும்! 13