126 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
துயில் கலைந்தது நிலைமண்டில ஆசிரியப்பா பாண்டியர்க் குரித்தெனப் பாடும் பெருமை பூண்டிடும் நல்ல பூம்புனல் வையைக் கரைமிசை அமர்ந்தேன், கற்றவர் இருவர் உரைபல நிகழ்த்தினர் உறுபயன் தருமெனச் செவிகொடுத் திருந்தேன்; சிவநெறிச் செல்வர் நவையறு தமிழ்நயம் நவிலத் தொடங்கினர்; “ஓதிய மொழிகள் பலவுளும் உயர்ந்திடும் ஆதி சிவன்தரும் அருமைத் தமிழை ஏட்டில் எழுதி எரிதினில் இட்டோம் பாட்டின் ஓலை பசுமையோ டிருந்தது; விரைபுனல் ஆற்றில் விடுத்தனம் அதனை; கரையவர் வியந்திடத் திரைபிளந் தெதிர்த்து நீந்தும் மீனென நீள்கரை சேர்ந்தது; வேந்தனும் கண்டனன்; விளைபுகழ்த் தமிழின் பெருமையை விளக்கும் பெற்றியன் றோ?”என, “அருமை! அருமை!” என்றனர் அருகர்;, “நீவிர் புகன்ற நெருப்பிலும் நீரிலும் பாவுடன் தமிழைப் பாங்குடன் எழுதி இட்டோம் நாங்களும் எரிந்தன அழிந்தன! சிட்டரே தமிழின் சிறுமையைப் பாரீர்!” சமணர் இங்ஙனம் சாற்றினர்; “உங்கள் சமயச் சிறுமையைச் சாற்றுவ ததுவே தமிழின் குறைவெனல் சரியிலை” எனமன அமைதி குலைந்திட அறைந்தனர் சைவர்; |