பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்137

கவிமணி

நேரிசை வெண்பா

செந்தமிழ்க்கு வாழ்வளித்தோன்
    சேர்ந்தோர்க்கு நண்பளித்தோன்
சிந்தையினைச் செம்மைக்கே
    தந்துவந்தோன் - உந்திஎழும்
செய்யுளுக்கு வாயளித்தோன்
    தேசிகவி நாயகனை
உய்யவரு வள்ளலென
    ஓது.

ஒன்றிரண்டு கற்றவுடன்
    ஒப்புண்டோ இங்கெமக்
கென்றலைவோர் மிக்குவரும்
    இந்நாளில் - துன்பறியநல்
நூலுணர்வும் நுண்மாண்
    நுழைபுலமும் வாய்த்தும் எப்
பாலும் பணிவதவர்
    பண்பு.

ஆத்தங் குடியூரில்
    அண்ணா மலையரசர்
போர்த்திப் புகழ்செய்தார்
    பொன்னாடை ஏத்தெல்லாம்
எற்கன்று தாய்த்தமிழுக்
    கென்ற கவிமணியார்
நிற்கின்றார் என்னுள்
    நிறைந்து. 3

(செட்டிநாட்டரசர், கவிமணி அவர்களுக்குப் பொன்னாடை அணி வித்துப் போற்றிச் சிறப்பித்த காட்சியைக் கண்டு களித்துப் பாடிய பாடல்.)