138 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
திரு.வி.க. எண்சீர் விருத்தம் சமயங்கள் எத்துணையோ அனைத்தும் கற்றுச் சமத்துவமே கண்டுணர்ந்தார்; சைவர் புத்தர் சமணரென்றும் கிறித்துமுக மதிய ரென்றும் சச்சரவேன்? இறைஒன்றை உணர்க என்றார்; தமரென்றும் பிறரென்றும் காணார்; நல்ல தமிழ்நாடும் திராவிடமும் இந்தி யாவும் நமதென்பார்; உலகம்நம தென்றும் சொல்வார்; நாகாக்கும் நாகரிகம் அமையப் பெற்றார் காந்தியத்து நெறிநிற்பார், கடவுட் கொள்கை கனிந்திருப்பார், பொதுவுடைமைக் கொள்கை ஒன்றே சாந்தியினை அமைதியினை நல்கும் என்று சமரசமே வேண்டிடுவார்; எந்த நாளும் தாந்தீமை கருதலிலார் எவரை யேனும் தாழ்ச்சியுரை செப்பறியார், இனிய சொல்லே ஈந்திடுவார்; வேறுபடு கருத்துக் கொண்ட எவரையுமே பகைத்தறியார், நண்பே காண்பார் சமயமென்றும் தொழிலாளர் இயக்க மென்றும் சார்ந்தோருள் எவரைவிரும் பிடுவீர் என்றால், சமயமுறின் பின்னவர்க்கே என்வி ருப்பைத் தருவேன்என் றறுதியிட்டுச் சொன்ன சொல்லில் இமயமலை பெயர்ந்தாலும் பெயரா வுள்ளம் எதிர்ப்புக்கும் கொடுஞ்சிறைக்கும் அஞ்சா வூக்கம் அமையவரு பெற்றியினர்; மார்க்சு சொன்ன அறவுரையைத் தெளிவாக உணர்ந்த சான்றோர் |